அரசு வாகன ஓட்டுநர்களுக்கு மருத்துவப் பரிசோதனை; தோல்வி அடைந்தால் வேறு பணி: தமிழக அரசு உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், தோல்வி அடைந்தால் அவர்களுக்கு வேறு பணி வழங்கப்படும் என்று இது தொடர்பான அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, கண், காது உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 50 வயதுக்கு குறைவானவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறையும் பரிசோதனை நடத்த வேண்டும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இந்த மருத்துவப் பரிசோதனையில், ஒரு ஓட்டுநரின் உடல் நிலை வாகனம் ஓட்டத் தகுதியான நிலையில் இல்லை என்ற மருத்துவர் சான்று அளித்தால், அவர்களுக்கு வேறு பணி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE