காஞ்சிபுரத்தில் தற்கொலைக்கு முயன்ற காவலர் ஒருவரை சகோதரர் போல் அரவணைத்து அவருக்கு ஆறுதல் கூறி தேற்றிய மாவட்ட எஸ்.பி குறித்து காவலர்கள் பொதுமக்கள் பாராட்டுவது வாட்ஸ் அப், பேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது.
இயல்பாக ஒருவருக்குள் இருக்கும் நல்ல மனம், செயல் அவர் விரும்பாவிட்டாலும் அவரைப்பற்றி அனைவரையும் பேச வைத்துவிடும். அதற்கான உதாரணமாக கடந்த இரண்டு நாட்களாக வாட்ஸ்அப், முகநூலில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பற்றிய மனித நேய செய்தியை காவலர்களும், பொதுமக்களும் பாராட்டி வாழ்த்து மழை பொழிகிறார்கள்.
காஞ்சிபுரம் காவல் துறையின் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வரும் குமார்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற காவலர் பாதுகாப்புக்குச் செல்லும் முன் ஆயுத கிடங்கில் துப்பாக்கியில் புல்லட் நிரப்பி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். அதைப்பார்த்த மற்ற காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றியுள்ளனர்.
உடனடியாக இந்த தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹிதிமானியின் கவனத்துக்கு கொண்டுச்செல்லப்பட்டது. பொதுவாக இது போன்ற விவகாரங்களில் உயர் அதிகாரிகள் இதை பெரிதாக பொருட்படுத்த மாட்டார்கள். இன்னும் சிலர் அந்த காவலர் மீதே நடவடிக்கையும் எடுக்க உத்தரவிடுவார்கள். ஆனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹிதிமானி செய்த காரியம் தான் இன்று அனைத்து காவலர்களால் பேசப்படுகிறது. உயர் அதிகாரியான அவர் தனக்கு கீழ் உள்ளவர்களுக்கு உத்தரவிட்டு அந்த காவலரை தனது அலுவலகத்துக்கு வரவழைத்திருக்கலாம், அப்படி செய்யாமல் உடனடியாக காவலர் இருந்த இடத்திற்கு வேகமாக தனது காரில் வந்திறங்கியவர் காவலரை அருகில் அழைத்து ஆதரவாக கட்டி அணைத்து தலையை கோதியுள்ளார்.
அந்த செயல் அந்த காவலரை கதறி அழ வைத்துள்ளது. உடனே அந்த காவலருக்கு ஆறுதல் கூறி அவரது கண்ணீரை துடைத்து விட்டபடி, அந்த காவலரின் தோள் மேல் கையைபோட்டு ஆதரவாக நடத்திக்கொண்டே அந்த காவலரிடம் ”நான் இருக்கிறேன் உனக்கு, என்ன பிரச்சனை என்று சொல் என்ன வேண்டுமானாலும் செய்து தருகிறேன்” என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் அங்கிருந்த மற்ற காவலர்களையும் நெகிழ வைத்துள்ளது. உயர் அதிகாரி தனது நிலையை பார்த்து அணைத்து ஆறுதல் சொன்னவுடன் தற்கொலைக்கு முயன்ற காவலர் மனதில் உள்ளதையெல்லாம் அழுதபடி கூறியுள்ளார்.
அவருக்கு குடும்ப பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தமே தற்கொலை செய்து கொள்ள தூண்டியது என்பதை புரிந்துக்கொண்ட எஸ்.பி உடனடியாக அந்த காவலருக்கு கவுன்சிலிங் ஏற்பாடு செய்துள்ளார். கவுன்சிலிங் முடிந்தவுடன் உடன் சில காவலர்களை உதவிக்கு ஏற்பாடு செய்து ஒரு வாகனம் ஏற்பாடு செய்து அந்த காவலருக்கு விடுமுறையும் அளித்து கோவை மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அத்துடன் மற்ற காவலர்களையும் அழைத்த எஸ்.பி.சந்தோஷ் ஹிதிமாணி “உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேளுங்கள். வீட்டில் பிரச்சனை என்றால் சொல்லுங்கள்,பணியில் பிரச்சனை என்றால் சொல்லுங்கள், செய்து தருகிறேன்.சொன்னால்தான் எனக்கு தெரியும்” என்று கூறியுள்ளார்.
இந்த தகவலை அறிந்து காஞ்சிபுரம் எஸ்.பி சந்தோஷ் ஹிதிமாணியை தி இந்து தமிழ் சார்பில் தொடர்பு கொண்டு வாழ்த்தினோம். காவலர் தற்கொலை முயன்ற சம்பவத்தை பற்றி கேட்டபோது ”அந்த காவலரிடம் பேசினேன், அவர் குடும்ப பிரச்சனையால் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார் என்பது தெரிந்தது.உடனடியாக அவருக்கு இரண்டு மணி நேர கவுன்சிலிங் தரப்பட்டது. பிறகு அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தேன் சந்தோஷத்துடன் சென்றார். இன்று அவர்களது பெற்றோரிடம் பேசினேன் அவர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி” என்றார். உங்களை போன்ற அதிகாரிகளின் மனித நேயம் பாராட்டுக்குறியது என்று கூறினோம். ” நான் சாதாரணமாக என் வேலையைத்தான் செய்தேன், என்னைப்போல் பல அதிகாரிகள் உள்ளனர் நல்லதும் செய்கிறார்கள்” என்றார் சந்தோஷ் ஹிதிமானி.
கர்நாடகத்தை பூர்வீகமாக கொண்ட ஐபிஎஸ் அதிகாரியான சந்தோஷ் ஹிதிமானி இதற்கு முன்னர் மயிலாடுதுறையில் ஏஎஸ்பியாக இருந்தபோது தனது மனிதபிமான நடத்தையால் கடைநிலை காவலர்களின் மனதில் நல்ல இடத்தை பெற்றுள்ளார். பொது மக்களிடமும் அவரது அணுகுமுறையும், நேர்மையான நடத்தையும் நல்ல பெயரை பெற்றுத்தந்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago