ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு

By செய்திப்பிரிவு

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு தடை விதிக்ககோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது, சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இணையதள விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்கள், நீதிமன்றம் சென்றதால், சட்டத்தை ரத்து செய்த நீதிமன்றம், புதிய சட்டம் கொண்டுவரலாம் என்று தெரிவித்தது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக அரசு பொறுப்பேற்றதும், கடந்த ஆண்டு இறுதியில் ஆன்லைன் விளையாட்டுகளின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுடன் ‘தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல், ஒழுங்குபடுத்துதல் அவசர சட்டம்’ கடந்த ஆண்டு அக்.1-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது.

பின்னர், அவசர சட்ட மசோதாவுக்கு பதிலாக, அதில் உள்ள ஷரத்துகளில் எந்த மாற்றமும் செய்யாமல், சட்டப்பேரவையில் கடந்த அக்.19-ம் தேதி மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. 131 நாட்கள் கழித்து ஆளுநர் அந்த மசோதாவை கடந்த மார்ச் 6-ம் தேதி அரசுக்கு திருப்பி அனுப்பினார். கடந்த மார்ச் 23-ம் தேதி சட்டப்பேரவையில் மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு அடுத்த நாளே ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 10-ம் தேதி மாலையில் ஒப்புதல் அளித்தார். சட்டம் உடனடியாக அரசிதழில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்யப்பட்டது.

இந்த சட்டத்துக்கு தடை விதிக்க கோரியும், ரத்து செய்யக் கோரியும், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் கலைமதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி காணொலி வாயிலாக ஆஜராகி முறையீடு செய்தார்.

முறையீட்டை கேட்ட நீதிபதிகள், மனுத்தாக்கல் செய்து, மனு முறையாக இருந்தால் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனவும், இல்லாவிட்டால் வழக்கமான பட்டியலில் இடம்பெறும் என்றும் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE