தஞ்சாவூர் | மாணவரின் ஆடைகளைக் களைந்து சோதனை; டிஐஜி அலுவலகம் முற்றுகை: 30 பேர் கைது

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் இன்று காலை தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் கடந்த 24 ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டமளித்தார். இந்த பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுவதற்காக எம்.பி.,ல் முடித்த இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் அரவிந்த்சாமி என்பவர் பட்டம் பெற வந்தார். அவரை போலீஸார் பட்டம் பெற விடாமல் தடுத்து அவர் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட முயல்கிறார் என்று கூறி வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். மேலும் அவரது ஆடைகளைக் களைந்தும் சோதனை நடத்தினர் .

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை சரக டிஐஜி அலுவலகத்தை இன்று இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் வாலிபர் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று காலை தஞ்சாவூர் டிஐஜி அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் நிருபன் சக்கரவர்த்தி தலைமையில் மாணவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாரின் தடுப்புகளை மீறி மாணவர்கள் ஏறி குதித்து அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர்.

அப்போது போலீஸார் அவர்களை தடுத்தபோது போலீஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதில் போலீஸார் மாணவர்களை குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றிக் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE