பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியீடு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு மே.8 ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 8 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும்.

மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தள முகவரியில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம். அதில், மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும், உறுதிமொழி படிவத்திற்கு குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் மூலமாகவும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மன உளைச்சலைத் தவிர்க்க.. தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்.3-ம் தேதியுடன் முடிந்தது. இத்தேர்வை 8.30 லட்சம் மாணவர்கள் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் 79 மையங்களில் ஏப்.10 முதல் 21-ம் தேதி வரை நடைபெற்றது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்ததைத் தொடர்ந்து, இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகள் நடந்து வருகின்றன.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், நீட் தேர்வு மே 7-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாக பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். எனவே, தேர்வு முடிவு வெளியீட்டை தள்ளிவைக்க வேண்டும் என பல தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்று, நீட் தேர்வுக்கு பிறகு, பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிட பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதன்படி, பிளஸ் 2 தேர்வு முடிவு மே.8 ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE