கூடங்குளம் அணு உலையில் பணியாற்றிய ரஷ்ய தலைமை விஞ்ஞானி மாரடைப்பால் மரணம்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்றிய ரஷ்ய தலைமை விஞ்ஞானி மாரடைப்பால் உயிரிழந்தார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் 4 அணுஉலைகளுக்கான கட்டுமானபணி நடைபெற்று வருகிறது.

இங்கு ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ் நாடுகளைச் சேர்ந்த 90-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பணிபுரிகின்றனர். இவர்களில் பலரும் தங்கள் குடும்பத்தினருடன் செட்டிக்குளத்திலுள்ள அணுவிஜய் நகரிய குடியிருப்புகளில் வசிக்கின்றனர்.

ரஷ்ய விஞ்ஞானிகளுக்கு தலைமை விஞ்ஞானியாக ரஷ்யாவைச் சேர்ந்த வடிம் கிளிவ்னென்கோ (62) இருந்தார். நேற்று முன்தினம் இரவில் திடீரென இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அணுவிஜய் நகரியத்திலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து நாகர்கோவில் வடசேரி போலீஸார் விசாரணை நடத்தினர். விஞ்ஞானியின் உடலை தூதரகம் மூலம் ரஷ்யாவுக்கு கொண்டு செல்ல அணுமின் நிலைய நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

‘கூடங்குளத்துக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வந்த வடிம் கிளிவ்னென்கோ, இங்கு மூன்று மற்றும் நான்காவது அணு உலைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இவரது மறைவு ரஷ்ய விஞ்ஞானிகள் குழுவினருக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த கூடங்குளம் அணு மின் நிலைய வளர்ச்சிக்கும் பேரிழப்பாகும்’ என அணு உலை நிர்வாகம் தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE