வேங்கைவயல் சம்பவம் | டிஎன்ஏ பரிசோதனைக்காக 3 பேரிடம் ரத்த மாதிரி சேகரிப்பு: 8 பேர் சோதனைக்கு வராமல் புறக்கணிப்பு

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக டிஎன்ஏ பரிசோதனைக்காக நேற்று 3 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. மேலும் 8 பேர் பரிசோதனையை புறக்கணித்தனர்.

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது குறித்து சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி தலைமையிலான போலீஸார் விசாரித்து வருகின்றனர். மொத்தம் 11 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனையும், அதில் 2 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனையும் செய்ய போலீஸார் முடிவெடுத்தனர். இதற்கு புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில் ஆயுதப்படை காவலர் உட்பட 2 பேருக்கு கடந்த வாரம் சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் சோதனை நடத்தப்பட்டது.

பின்னர், டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்கு ரத்த மாதிரி சேகரிப்பதற்காக 11 பேரும் நேற்று ஆஜராகுமாறு ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

அதில், ஏற்கெனவே குரல் மாதிரி பரிசோதனைக்கு ஆஜராகிய காவலர் மற்றும் 2 பேர் என மொத்தம் 3 பேர் நேற்று புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயியல் பிரிவு ஆய்வகத்தில் ஆஜராகினர். அவர்களிடமிருந்து ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. அப்போது, சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி உடனிருந்தார்.

8 பேர் ரத்த மாதிரி கொடுக்க வராமல் புறக்கணித்தனர். டிஎன்ஏ பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 8 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE