அனுமதியின்றி செயல்பட்ட மருத்துவ கல்வி நிறுவனத்துக்கு ‘சீல்’ - வெள்ளகோவில் அருகே மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்

By செய்திப்பிரிவு

திருப்பூர்: வெள்ளகோவில் அருகே அனுமதியின்றி செயல்பட்ட மருத்துவ கல்வி நிறுவனத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஓலப்பாளையத்தில் செயல்பட்டுவந்த மருத்துவ கல்வி நிறுவனத்தில் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் கனகராணி தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். அரசு அங்கீகாரம் பெறாமல் இயங்கிவந்தது தெரியவந்ததால் கல்வி நிறுவனம் மற்றும் மருத்துவமனைக்கு ‘சீல்’ வைத்தனர். இதனால், தற்போது அங்கு படித்து வரும் மாணவர்கள் மற்றும் ஏற்கெனவே படித்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கல்வி நிறுவனத்தில் படித்துவரும் மாணவர்கள், தங்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி வெள்ளகோவில் முத்தூர் சாலையில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் சென்று அவர்களை சமாதானப்படுத்தினர்.

இதுதொடர்பாக, திருப்பூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் கனகராணி கூறியதாவது: ஓலப்பாளையத்தில் இயங்கி வந்த கல்வி நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த கல்லூரியில் டிப்ளமோ இன் மெடிக்கல் லேப் டெக்னாலஜி மற்றும் பி.இ.எம்.எஸ். மற்றும் எம்.டி. (இ.எச்) படிப்புகள் போன்றவை நடத்தப்படுகின்றன. இந்த 2 படிப்புகளையும் நடத்த மருத்துவ கல்வி இயக்ககத்திடம் எந்த அனுமதியும் பெறவில்லை.

பி.இ.எம்.எஸ். மற்றும் எம்.டி. (இ.எச்.) படிப்பு தமிழ்நாட்டில் நடத்துவதற்கும், படித்து முடித்தவர்கள் சிகிச்சை அளிப்பதற்கும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏற்கெனவே தடை விதித்துள்ளது.

இதனால் உரிய சான்றுகள் பெறாமல் மருத்துவம் சார்ந்த படிப்புகளை பயிற்றுவித்ததுடன், வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதும் தெரியவந்ததால், நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் விதமாக இம்மருத்துவமனைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது என்றார்.

இன்று (ஏப்.26) காலை 10.30 மணிக்கு திருப்பூர் மாவட்ட ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெறும் விசாரணைக்கு வருமாறு, மருத்துவ கல்வி நிறுவனத்தின் இயக்குநர் தரண்யா மற்றும் கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியம் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அனுமதியின்றி படிப்புகள்: கனகராணி மேலும் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சில தனியார் கல்வி நிறுவனங்கள் மருத்துவம் சார்ந்த படிப்புகளை, தமிழக அரசின் அனுமதியின்றி பயிற்றுவித்து வருவதாக தெரிகிறது. அதன்படி நர்சிங், லேப் டெக்னாலஜி, எக்ஸ்ரே டெக்னாலஜி, ஓ.டி. டெக்னாலஜி, பார்மசி, பார்மசி அசிஸ்டண்ட், எமெர்ஜென்சி ஹெல்த் கேர், ஹெல்த் கேர் அசிஸ்டெண்ட், பிசியோதெரபி, எலெக்ட்ரோபதி அன்ட் எலெக்ட்ரோ ஹோமியோபதி மெடிக்கல் சென்டர், ஆயுஷ் படிப்புகள் மற்றும் பட்ட படிப்புகளில் எம்.டி. பி.இ.எம்.எஸ்., எம்.டி. எலெக்ட்ரோ ஹோமியோபதி, எம்.டி. அக்குபஞ்சர் ஆகிய படிப்புகள் அனுமதியின்றி நடத்தப்படுகின்றன. மருத்துவம் சார்ந்த கல்வி நிறுவனங்களை நடத்த முறையாக விண்ணப்பித்து சான்றுகள் பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவம் சார்ந்த படிப்புகளை முடித்தவுடன், அவற்றை தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள கவுன்சிலில் பதிவு செய்த பின்னர்தான் அதற்கான வேலைவாய்ப்பை பெற தகுதி பெறுவார்கள். அரசு அனுமதி பெறாமல் இயங்கும் கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் அங்கீகரிக்கப்படமாட்டாது.

மேலும், தமிழ்நாட்டில் இயங்கும் தனியார் கிளினிக்குகள், மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவ நிறுவனங்கள் அனைத்தும் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டம் 1997-ன்படி பதிவு பெற வேண்டும்.

மாணவர்களுக்கு எச்சரிக்கை: அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் படிப்புகளை முடித்தவர்கள் யாரும், மேற்படி சட்டத்தின்படி தனியார் மற்றும் அரசு மருத்துவ நிலையங்களில் பணிபுரிய தகுதியற்றவர்களாகவே கருதப்படுவார்கள். மாணவ, மாணவிகள் மருத்துவ கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு முன்பு, அவை தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதுபோல் வெளிமாநிலங்களில் மற்றும் வெளிநாடுகளில் பயின்ற மருத்துவம் சார்ந்த படிப்புகளை, தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற கவுன்சிலில் பதிவு செய்து அனுமதி பெற்ற பின்னரே படிப்பு சார்ந்த தொழிலில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE