ராஜபாளையத்தில் டாஸ்மாக் கடை தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டத்தில் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம்

By அ.கோபால கிருஷ்ணன்

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் டாஸ்மாக் கடை திறப்பது தொடர்பாக நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் இருந்த டாஸ்மாக் கடை (12070), ஊரகப் பகுதியில் இருந்ததால் பாதுகாப்பு கருதி, கடந்த ஆகஸ்ட் மாதம் தென்றல் நகர் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் குடியிருப்புகள் உள்ளதால் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில் ஆகஸ்ட் 24- ம் தேதி மாலை டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு வியாபாரம் நடந்ததால் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடை மீது சிலர் கல்வி வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் பழைய இடத்திலேயே முடங்கியாறு சாலையில் டாஸ்மாக் கடை திறப்பது குறித்து ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. வட்டாட்சியர் ராமச்சந்திரன், கலால் துறை உதவி ஆணையர் அமிர்தலிங்கம், டாஸ்மாக் மேலாளர் ரவிக்குமார் மற்றும் போலீஸார் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சிலர், ''எங்களுக்கு டாஸ்மாக் கடை கண்டிப்பாக வேண்டும்'' என்றனர். அதற்கு, ''டாஸ்மாக் கடை வருவதால் பாதுகாப்பு இல்லை'' என கூறி பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கலால் துறை உதவி ஆணையர் அமிர்தலிங்கம், டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பியவர்களிடம், ''எங்களை பணிகள் செய்யவிடாமல் தடுத்தால் போலீஸில் புகார் அளிப்பேன்'' என்றார். அதன்பின், ''கண்டிப்பாக ஏதாவது ஒரு இடத்தில் டாஸ்மாக் கடை திறக்க வேண்டும். பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,'' என்றார்.

இதையடுத்து ஏற்கனவே 10 ஆண்டுகளாக முடங்கியாறு சாலையில் செயல்பட்டு வந்த இடத்திலேயே டாஸ்மாக் கடை திறக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. டாஸ்மாக் கடை அமைக்க ஆதரவு தெரிவித்து சிலர் கையெழுத்திட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்களும், பாஜகவினரும் வெளிநடப்பு செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE