சிறுவாணி விவகாரம்: கேரள அரசின் அத்துமீறலுக்கு திமுக அரசு துணைபோவதாக சீமான் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: "காவிரி நதிநீரைத் தரமறுக்கும் கர்நாடக மாநில பாஜக அரசின் அத்துமீறலுக்குத் துணைபோகும் தமிழ்நாடு பாஜகவின் துரோகத்திற்குச் சற்றும் குறைவில்லாதது, சிறுவாணி நதிநீரைத் தடுக்கும் கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசின் அத்துமீறலுக்குத் துணைபோகும் திமுக அரசின் பச்சைத் துரோகம்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறுவாணி ஆற்றின் குறுக்கே அடுத்தடுத்து 3 தடுப்பணைகள் கட்டும் கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசின் நடவடிக்கை பெரும் அதிர்ச்சியளிக்கிறது. கேரள அரசின் எதேச்சதிகாரப் போக்கினைத் தடுக்கத் தவறி, வேடிக்கைப் பார்க்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

உலகின் மிகச் சுவையான நன்னீர் ஆறுகளில் ஒன்றான சிறுவாணி ஆறு கோவை மாவட்டத்தின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்காற்றுகிறது. ஆனால், அதனைக் கெடுக்கும் வகையில் கேரள மாநில அரசு சிறுவாணி ஆற்றின் குறுக்கே கூலிக்கடவு – சித்தூர் சாலையில் தற்போது புதிய தடுப்பணையைக் கட்டி முடித்துள்ளதுடன், மேலும் 2 இடங்களில் தடுப்பணைகளைக் கட்ட தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் சிறுவாணி ஆற்றுநீர் உரிமை முற்று முழுதாகக் கானல் நீராகி, கோவையில் மிகப்பெரிய குடிநீர் பஞ்சம் ஏற்படக்கூடிய பேராபத்து ஏற்பட்டுள்ளது.

இரு மாநிலங்களுக்கு இடையிலான நதியின் குறுக்கே, எந்த ஒரு மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் ஒப்புதலின்றித் தன்னிச்சையாக எவ்வித அணையும் கட்டமுடியாது என்பதை உச்சநீதிமன்றம் பலமுறை தனது தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, சிறுவாணி ஆறானது காவிரி மேலாண்மை ஆணையத்தின் கீழ் வரும் நிலையில் கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு தமிழ்நாடு அரசின் ஒப்புதலின்றி முறைகேடாகத் தடுப்பணைகளைக் கட்டிவருவது அப்பட்டமான நதிநீர் சட்ட விதிமீறலாகும்.

ஏற்கெனவே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணையை கர்நாடக மாநில அரசு கட்டிமுடித்தபோது, அதுகுறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்று திமுக அரசு கைவிரித்த நிலையில், தற்போது கேரள அரசு சிறுவாணி ஆற்றின் குறுக்கே கட்டியுள்ள தடுப்பணையின் 90 விழுக்காடு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதுகுறித்தும் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறுவது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிக்காட்டுகிறது. அதுமட்டுமின்றி, கேரள மாநில அரசு சிறுவாணி ஆற்றின் கொள்ளளவை 50 கன அடியிலிருந்து 45 கன அடியாக ஏற்கெனவே குறைத்துள்ளதோடு, கோடைக்காலத்தில் நீர் எடுக்கும் சிறுவாணி ஆற்றின் சுரங்கப்பாதையையும் சிறிதும் மனிதத் தன்மையின்றி மூடியுள்ளது பினராயி விஜயன் தலைமையிலான கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு.

கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் நெருங்கிய நட்பு பாராட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணியில் உள்ள திமுக அரசு, தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கும் கேரள மாநில அரசின் அத்துமீறலை இதுவரை கண்டிக்காதது ஏன்? கேரள அரசு மீது எவ்வித நடவடிக்கையும், சட்ட நடவடிக்கையும் இதுவரை எடுக்காதது ஏன்? காவிரி நதிநீரைத் தரமறுக்கும் கர்நாடக மாநில பாஜக அரசின் அத்துமீறலுக்குத் துணைபோகும் தமிழ்நாடு பாஜகவின் துரோகத்திற்குச் சற்றும் குறைவில்லாதது, சிறுவாணி நதிநீரைத் தடுக்கும் கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசின் அத்துமீறலுக்குத் துணைபோகும் திமுக அரசின் பச்சைத்துரோகம்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைகட்டும் கர்நாடக அரசு, பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டும் ஆந்திர அரசு, சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டும் கேரள அரசு என்று, ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளை ஒவ்வொன்றாய் தாரைவார்ப்பதற்குப் பெயர்தான் திமுக அரசின் திராவிட மாடலா? என்ற கேள்வியும் எழுகிறது.

ஆகவே, சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டி கோவையைப் பாலைவனமாக்கும் கேரள அரசின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக வழக்கு தொடர்ந்து, சமரசமற்ற சட்டப்போராட்டம் நடத்தி தமிழர்களின் நதிநீர் உரிமை பறிபோகாமல் பாதுகாக்க வேண்டுமென தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று சீமான் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்