செயல்பாட்டிற்கு வந்தது சென்னை விமான நிலைய புதிய முனையம்: டாக்காவுக்கு முதல் விமானம் இயக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனையம் இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இதன்படி டாக்காவுக்கு முதல் விமானம் இயக்கப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில், 1.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள, புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தின் முதல் பகுதியை பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பு திறந்து வைத்தார். உலகத் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த முனையம் மூலம், சென்னை விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறன் 2.3 கோடியில் இருந்து, 3 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில், தமிழகத்தின் முக்கிய கோயில்கள், கலைகளின் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சைஓவியங்கள், காஞ்சிபுரம் சேலைகள் உள்ளிட்டவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய முனையம் இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இதன்படி புதிய முனையத்தில் இருந்து வங்கதேசத் தலைநகர் டாக்காவுக்கு, யு.எஸ்., பங்களா விமானம் முதல் விமானமாக இயக்கப்பட்டது. இதன்படி, முதல் பயணிக்கு விமான நிலைய அதிகாரிகள், ரோஜாப்பூ கொடுத்து வரவேற்பு அளித்து போர்டிங் பாஸ் வழங்கினர்.

சென்னை விமான நிலையத்தில் தற்போது, 1,500 வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய முனையத்தில் கூடுதலாக 500 சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE