சமூக சீர்திருத்த தலைவர்கள் வரலாற்றை இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

சென்னை: வள்ளுவர், வள்ளலார், பெரியார் உள்ளிட்ட சமூக சீர்திருத்த தலைவர்களின் வரலாற்றை இளைஞர்கள் அறிந்து கொள்வது அவசியம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில், கல்லூரி மாணவர்களுக்கான தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரையான 'மாபெரும் தமிழ்க் கனவு' 100-வது நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் நேற்று நடைபெற்றது.

தலைமை வகித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தொடர்ச்சியான பரப்புரைகள் மூலம்தான் நல்ல கருத்துகளை விதைக்க முடியும். ஒரு கருத்தை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டுமென்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறுவார். அதுபோல, நல்ல கருத்துகளை விதைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டு இளைஞர்கள் தமிழின் பெருமையை, தமிழனத்தின் பண்பாட்டை, தமிழ்நாட்டின் வரலாற்றை முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும். அதற்காகத்தான் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

சமத்துவத்தை நோக்கி...: தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளையும், தமிழ் இனத்தின் வரலாற்றையும் இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மொழியின் சிறப்பை, மக்களுக்காக உழைத்த தலைவர்களை, நாட்டின் வளத்தை தெரிந்திருக்க வேண்டும். வள்ளுவர், பெரியார், அண்ணா, கருணாநிதி போன்றோர் தெரிவித்த சமத்துவத்தை நோக்கியே திராவிட இயக்கம் பயணிக்கிறது.

சங்ககாலத் தமிழர் வாழ்க்கை, அறம் சார்ந்த வாழ்க்கை. இடைக்காலத்தில் புகுந்த சனாதனம் அறத்தைக் கொன்றது, தமிழ்ச் சமுதாயத்தில் சாதிய, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை விதைத்தது. இதற்கு எதிரானப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வள்ளுவர், வள்ளலார் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டின் பெரியார் வரையிலான சமூக சீர்திருத்த தலைவர்களின் வரலாற்றை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்வது அவசியம்.

கோயிலுக்குள் நுழைய முடியாது, சாலைகளில் நடக்கக் கூடாது, படிக்கக் கூடாது, எதிரே வரக்கூடாது போன்ற தடைகள் எல்லாம் இப்போது இல்லை. இதுவே சமூக சீர்திருத்தத் தலைவர்களின் வெற்றி.

காமராஜர் பள்ளிகளைத் திறந்தார். அண்ணாவும், கருணாநிதியும் கல்லூரிகளைத் திறந்தனர். உயர்கல்வியை மட்டுமின்றி, மாணவர்களுக்கான தகுதிகளையும் உருவாக்கித் தருகிறது திமுக அரசு. கல்வியுடன், தனித் தகுதிகளும், திறமைகளும் அவசியம். அதிக மதிப்பெண் பெற்றாலும், தனித் திறமை கொண்டவர்களுக்கே நல்ல வேலை கிடைக்கிறது.

நான் முதல்வன் திட்டம்: சுயமாகச் சிந்திப்பது, சிந்தித்ததை அடுத்தவருக்கு வெளிப்படுத்துவது இதுதான் அறிவுக்கூர்மை. இதை மனதில் கொண்டுதான் நான் முதல்வன் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தை இளைஞர்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். யாராலும் பறிக்க முடியாத சொத்து கல்விதான். அதை சேகரித்துவிட்டால், மற்ற சொத்துகள் தானாக வந்துவிடும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இந்த விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், துறைச் செயலர் ஜெ.குமரகுருபரன், சென்னை மேயர் ஆர்.பிரியா, தமிழ் இணையக் கல்வி கழக இயக்குநர் சே.ரா.காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்