'பழனிசாமியின் நம்பிக்கை துரோகத்துக்கு சாவுமணி அடிக்க வேண்டும்' - திருச்சி மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம்

By அ.வேலுச்சாமி

திருச்சி: ஓபிஎஸ் அணி சார்பில் முப்பெரும் விழா புரட்சி மாநாடு திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இதில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "கட்சியின் ஆணிவேராக இருக்கக்கூடிய தொண்டர்கள்தான் தலைமைப் பொறுப்புக்கு வர வேண்டும் என்று சட்ட ரீதியிலான உரிமையை எம்ஜிஆர் வழங்கினார். அவருக்குப் பின் வந்த ஜெயலலிதாவும் அதை உறுதிபடுத்தினார். இவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக, இந்த சட்ட விதிகளின்படியே கட்சியை வழிநடத்தி 30 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்யும் உரிமையை மக்களிடத்திலிருந்து பெற்றனர். அரசியல் வரலாற்றில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த பெருமையைப் பெற்ற ஒரே கட்சி அதிமுகதான்.

எம்ஜிஆர் மறைவின்போது 16 லட்சம் தொண்டர்களுடன் இருந்த இக்கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, 30 ஆண்டுகள் வேதனைகள், சோதனைகளைத் தாங்கி, எதிர்கட்சிகளை சமாளித்து பின்னாளில் 1.5 கோடி தொண்டர்களைக் கொண்ட கட்சியாக மாற்றினார். தொண்டர்கள்தான் கட்சியின் உயிர்நாடி, கட்சியின் ஆணிவேர் எனக் கருதினார். யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக வழிநடத்தினார். அவரைத்தான், கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளர் என்று உண்மையான பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம்.

ஆனால் அதற்குப் பின்னால் வந்த அரசியல் வியாபாரிகள், நயவஞ்சகர்கள், நம்பிக்கை துரோகிகள் அந்த தீர்மானத்தையே மாற்றினர். ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட நிரந்தர பொதுச்செயலாளர் அந்தஸ்தை ரத்து செய்த நயவஞ்சகர்களை ஓடஓட விரட்டும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

மீண்டும் ஒருமுறை முதல்வராக, கட்சித் தலைமை பொறுப்புக்கு வர வேண்டிய எண்ணம் எனக்கில்லை. தொண்டர்களாகிய உங்களில் ஒருவரை முதலமைச்சராக, கட்சியின் தலைமை பீடத்தில் உட்கார வைக்கும் கடமை எங்களுக்கு உள்ளது. நம்பிக்கையுடன் இருங்கள். தொண்டராக மட்டும் இருந்து இந்த இயக்கத்தை காப்பாற்றுகிறேன்.

நான் கட்சிப் பொருளாளராக பொறுப்பேற்றபோது ரூ.2 கோடி பற்றாக்குறையாக இருந்தது. அதன்பின் ஜெயலலிதாவின் வழிகாட்டுலுடன் ரூ.253 கோடியாக நிதியிருப்பை உயர்த்திக் காட்டினேன். அந்த பணத்தை வைத்துக்கொண்டு, தற்போது ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிக்கொண்டுள்ளனர். இந்த நிதியை தவறாக பயன்படுத்தியது குறித்து உரிய விசாரணை நடத்தி, நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜெயலலிதா என்னை 2 முறை முதல்வராக நியமனம் செய்தனர். 3-ம் முறை வி.கே.சசிகலா என்னை முதல்வராக்கினார். அவர்கள் திரும்ப கேட்டபோது, நான் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். அதுபோலவே பழனிசாமிக்கும் பதவி கொடுத்தார். ஆனால் அவரோ சசிகலாவைப் பார்த்து நாய் எனக் கூறுகிறார். எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகி. வரலாறு மன்னிக்குமா? இப்படிப்பட்ட நபர், தனக்குத்தானே பொதுச் செயலாளராக முடிச்சூட்டிக்கொண்டுள்ளார். எம்ஜிஆர் வேடமிட்டு புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கிறார். பழனிசாமியும், எம்ஜிஆரும் ஒன்றா? அவரது கால் தூசிக்குகூட ஆகமாட்டார்.

தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும் என்ற கட்சியின் விதிகளை மாற்றி, 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய, 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிபவர்தான் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும் என கொண்டுவந்துவிட்டார். என்ன திமிர், பணத்தின் மூலம் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களை விலைக்கு வாங்கி பொதுச் செயலாளராக வந்துவிட்டாய். அது எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு செய்த மிகப்பெரிய துரோகம். அந்த நம்பிக்கை துரோகி கட்சியில் தொடர்ந்து இருக்க வேண்டுமா என்பதை தொண்டர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா இப்படித்தான் கட்சியை வளர்த்தார்களா? பணத் திமிரை அடக்கி, ஒடுக்கி ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டும். கட்சி அமைப்பிலுள்ள 33 மாவட்டங்களில் மட்டும் இருந்து இங்கு வந்தவர்கள்தான் இந்த கூட்டம். இன்னும் 55 மாவட்டங்கள் உள்ளன. அங்கும் இதுபோன்று தொண்டர்கள்கூடும் மாநாடு உறுதியாக நடக்கும். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களை ஒன்றுசேர்த்து கட்டுக்கோப்பாக கட்சியை வழிநடத்துவோம்.

தொண்டர்கள் அனைவரும் வீதி, வீதியாகச் சென்று மக்களைச் சந்தித்து பழனிசாமியின் சர்வாதிகாரப் போக்கு, நம்பிக்கை துரோகத்துக்கு சாவுமணி அடிக்க வேண்டும். எங்களை முன்னிறுத்துங்கள். அதனால் வரும் தாக்குதல்களிலிருந்து உங்களை நாங்கள் பாதுகாப்போம். தமிழகத்தில் அடுத்து அமையப்போவது ஜெயலலிதாவின் ஆட்சியாக இருக்க வேண்டிய நிலையை நாம் உருவாக்க வேண்டும். இந்த கட்சியை மக்களுக்கான, தொண்டர்களுக்கான கட்சியாக கொண்டு செல்ல வேண்டும். சாதி, மதத்துக்கு இங்கு இடமின்றி சமத்துவ மக்களுக்காக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

வரும் காலம் தொண்டர்களுக்கான காலம். எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்களில் அறக்கட்டளை தொடங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி, நற்சான்றிதழ் வழங்கப்படும்" என்றார்.

இந்த மாநாட்டில் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கு.ப.கிருஷ்ணன், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன், கொள்கை பரப்புச் செயலாளர்கள் புகழேந்தி, மருது அழகுராஜ், எம்.பி.க்கள் ரவீந்திரநாத், தர்மர், எம்எல்ஏ ஐயப்பன், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்