திருச்சி மாநாடு ஓபிஎஸ்-க்கு திருப்புமுனையை கொடுக்குமா?

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: திருச்சியில் நாளை மாலை நடக்கும் மாநாடு, ஓ.பன்னீர்செல்வத்திற்கு திருப்புமுனையாக அமையுமா? என்ற எதிர்பார்ப்பு அவர்களது ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சி நடந்தபோது கே.பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சசிகலா, டிடிவி.தினகரனுக்கு எதிராக இரட்டை குழல் துப்பாக்கிப்போல் இணைந்து பயணம் செய்தனர். இவர்களுடைய இரட்டை தலைமையால் காலப்போக்கில் தேர்தலில் 'சீட்' பங்கீடு செய்வது, கட்சிப் பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக கட்சிக்குள் மோதல் வெடித்தது. பெரும்பான்மை மாவட்டச் செயலாளர்களாக கே.பழனிசாமி ஆதரவாளர்கள் இருந்ததால் அவர்கள் கட்சியில் முழுக்க முழுக்க தங்கள் ஆதரவாளர்களை நியமனம் செய்ததாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்தனர். கடந்த மக்களவைத்தேர்தல், சட்டசபைத்தேர்தல், இடைத்தேர்தல் நேரங்களில் வேட்பாளர்கள் தேர்வில் கே.பழனிசாமி ஆதரவாளர்கள் கையே ஓங்கியது. அதிருப்தியடைந்த ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுக்கு நியாயம் கேட்க, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் முதல் முறையாக, மதுரை மாவட்டத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் வேட்பாளரை தேர்ந்தெடுத்ததில்தான் வெடித்தது.

மதுரை மக்களவைத் தொகுதிக்கு ஓ.பன்னீர்செல்வம், தனது தீவிர ஆதரவாளர் முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணனை பரிந்துரை செய்ய, கே.பழனிசாமி தனது ஆதரவாளர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோர் சேர்ந்து ராஜன்செல்லப்பா மகன் ராஜ் சத்தியனை வேட்பாளராக பரிந்துரை செய்தனர். கே.பழனிசாமி, விடாபிடியாக ராஜ்சத்தியனை மதுரை தொகுதிக்கு வேட்பாளராக அறிவித்தார். அதனால், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அவருக்கு எதிராக வேலை செய்ததால் அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் மதுரையில் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனிடம் ராஜ்சத்தியன் தோல்வியடைந்தார். அதேநேரத்தில் ஆர்பி.உதயகுமார் தேர்தல் பணிபார்த்த தேனி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் மட்டும் தமிழகத்தின் ஒரே அதிமுக வேட்பாளராக வெற்றிப்பெற்றார்.

ஓ.பன்னீர்செல்வம், மக்களவைத்தேர்தல், அதனை தொடர்ந்து நடந்த சட்டசபை தேர்தலிலும் பெரியளவுக்கு தமிழகம் முழுவதும் சென்று அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவில்லை, சொந்த மாவட்டத்திற்குள்ளேயே முடங்கினார் என்றும், அவரது ஆதரவாளர்களே கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக உள்ளடி வேலைப்பார்க்க தூண்டிவிட்டதாக கே.பழனிசாமி தரப்பினர் குற்றம்சாட்டினர். இரு தரப்பினரின் இந்த மோதலால் ஆட்சி பறிபோனதும் இரு பிரிவாக பிரிந்து செயல்பட்டனர். இரு தரப்பினரும் மாறிமாறி ஒருவரை ஒருவர் நீக்கினர். உள்கட்சி விவகாரம், நீதிமன்றம், தேர்தல் ஆணையம் வரைபோய், தற்போது கே.பழனிசாமியை நீதிமன்றமும், தேர்தல் ஆணையும் அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகாரம் செய்தது. அதை ஏற்க மறுக்கும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், பொதுக்குழு உறுப்பினர்களும், நிர்வாகிகளுமே மட்டுமே கூடி அதிமுகவின் தலைமையை முடிவு செய்ய முடியாது, தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்க முடியும் எனக்கூறி மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வம், தன்னுடைய செல்வாக்கை காட்டுவதற்காக திருச்சியில் இன்று மாலை மிகப்பெரிய மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளார். திருச்சியில் தற்போது ஓபிஎஸ் மாநாடு நட்கும் ஜிகார்னர் மைதானத்தில் ஜெயலலிதாவும் மாநாடு நடத்தியுள்ளார். மேலும், திருச்சி தமிழகத்தின் மையமாக இருப்பதால் எந்த முக்கிய நகரங்களில் இருந்தும் அடுத்த 4 மணி நேரத்தில் திருச்சியை கட்சிக்காரர்கள் வந்தடைய முடியும் என்பதாலும் ஓ.பன்னீர்செல்வம் திருச்சியை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூறியதாவது: ''எம்ஜிஆர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டபோது, அவருக்கு அநீதி இழைக்கும் வகையில் கருணாநிதி கட்சி தொண்டர்களிடம் கருத்தை கேட்காமலேயே அந்த முடிவை எடுத்தார். அதனாலேயே அவர் கருணாநிதிக்கு எதிராக அதிமுகவை தொடங்கினார். தற்போது ஓபிஎஸ்ஸிடம் உள்ளதுபோல் எம்ஜிஆரிடம் மாவட்டச் செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏ-க்கள் பெரியளவில் வரவில்லை. தொண்டர்களை நம்பி கட்சி தொடங்கி அரசியலில் வெற்றிப்பெற்றார். அப்போது தனக்கு ஏற்பட்ட அநீதிபோல் கட்சியில் பிற்காலத்தில் யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே தொண்டர்களால் தலைவர் தேர்ந்தெடுக்கும்படி அதிமுக சட்டவிதிகளை உருவாக்கினார். ஆனால், கே.பழனிசாமி அவருக்கு சாதகமாக அதிமுக சட்டவிதிகளை மாற்றியுள்ளார்.

மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் கூடி அதிமுக சட்ட விதிகளை மாற்றிட முடியாது. தொண்டர்கள்தான் முடிவு செய்ய முடியும். நிர்வாகிகளை கொண்டு கட்சி கிடையாது. தொண்டர்கள்தான் கட்சியின் அடிநாதம். அவர்களை தேடிதான் நாங்கள் புறப்பட்டுள்ளோம். அதற்கான தொடக்கதான் இன்று நடக்கும் திருச்சி மாநாடு. கே.பழனிசாமியை முன்நிறுத்தி மக்களவைத் தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், 23 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல்கள், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் போன்றவை நடந்துள்ளது. இவற்றில் அவர் தோல்விதான் அடைந்துள்ளார். தொண்டர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. ஈரோடு கிழக்கில் ஓபிஎஸ் தான் அறிவித்த வேட்பாளரை வாபஸ் பெற்றார். டிடிவி.தினகரன் வேட்பாளரை நிறுத்தவில்லை. அதிமுகவின் சின்னம் கிடைத்து கே.பழனிசாமிதான் வேட்பாளரை முன்நிறுத்தினார்.

இவ்வளவுக்கும் அங்கு திமுக போட்டியிடவில்லை. காங்கிரஸிடம் அதிமுக தோல்வியடைந்தது. இதை தொண்டர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதிமுக கட்சிப் பொறுப்புகளில் ஜெயலலிதாவுக்கு பிறகு குறிப்பிட்ட சிலரே தொடர்ந்து முடிசூடா மன்னர்களாக கட்சிப் பொறுப்புகளில் உள்ளனர். எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் போல் தொண்டர்கள் தலைவர்களாக ஆக முடியவில்லை. தற்போது ஓ.பன்னீர்செல்வம் காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தொண்டர்கள் மாவட்டச் செயலாளர்களாக தலைவர்களாக மாறக்கூடிய காலம் வந்துள்ளது. இது அதிமுகவின் அடுத்தக்கட்ட வளர்ச்சியாகவே பார்க்கிறோம்.

மாநாட்டில் பங்கேற்க மாவட்டத்திற்கு 5 ஆயிரம் பேர் திருச்சிக்கு வருகிறார்கள். திருச்சி மாநாட்டிற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு என்ன என்பது, கே.பழனிசாமிக்கு மட்டுமில்லாது தமிழக அரசியலில் ஈடுபடக்கூடியவர்களுக்கும் தெரியவரும்.'' இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்