தமிழகத்தில் கூட்டுறவு துறை வங்கிகள் மூலமாக ‘மாணவர்கள் சிறுசேமிப்பு திட்டம்’ தொடங்க நடவடிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: மாணவ, மாணவிகளின் நலன் கருதி கூட்டு வங்கிகள் மூலமாக சிறுசேமிப்புத் திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பாக அத்துறையின் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம், கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) அ.சங்கர் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டம் முடிவில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறியதாவது: இந்தியாவுக்கே ஓர் முன்னோடியாக தமிழக கூட்டுறவுத் துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கூட்டுறவுத் துறை தொடர்பாக2023-24-ம் ஆண்டில் 44 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. கூட்டுறவுத் துறை மூலமாக விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு ஏதுவாக இந்தாண்டு கூட்டுறவுசங்கங்கள் மூலம் ரூ.14 ஆயிரம்கோடிக்கு பயிர்க்கடன் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் சிறுசேமிப்பு திட்டம்: மாணவ, மாணவிகளின் நலன் கருதி எதிர்காலத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலமாக சிறுசேமிப்புத் திட்டம் தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் செயல்படும் தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவது, வசூலிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதைத் தவிர்த்து, முழுநேர வங்கியாக செயல்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் கூட்டுறவுத்துறை மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஊருக்கு ஒரு சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் சிறு வணிகர்களின் நலன் கருதி 5 கிலோ, 2 கிலோ காஸ் சிலிண்டர்கள் விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் மூலமும் சிலிண்டர்கள் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காலி பணியிடங்கள்: தமிழகத்தில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு அவர்கள் பணிபுரியும் இடத்துக்கே லாரி மூலமாக 5 கிலோ மற்றும் 2 கிலோ சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படும். கூட்டுறவு சங்கங்கள் மூலமாக சுமார் 350 கூட்டுறவு மருந்தகங்களில் 20 சதவீத தள்ளுபடியில் அனைத்துவிதமான மருந்துகளும் விற்பனை செய்யப்படுகிறது.

விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் என சுமார் 4,500 காலிப் பணியிடங்களுக்கு 4.25 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 3.50 லட்சம் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வில் கலந்து கொண்டுள்ளனர்.

இதற்கிடையே, சில கூட்டுறவுசங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தற்போது வழக்கு நிலுவையில் உள்ளதால், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தற்போது சங்கங்களில் பணிபுரியும்பணியாளர்களுக்கு தகுதி அடிப்படையில் பதவி உயர்வும், தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு பணியாணையும் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE