சேலத்தில் ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு

By வி.சீனிவாசன்

சேலம்: சேலம் - கன்னங்குறிச்சி புது ஏரியில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோடை விடுமுறை என்பதால் சிறுவர்கள் ஆங்காங்கே உள்ள நீர்நிலைகளில் குளிப்பதற்காக செல்கின்றனர். சேலம் கன்னங்குறிச்சி புது ஏரியில் ஏராளமான சிறுவர்கள் இன்று ஏரியில் குளித்துக் கொண்டிருந்தனர். புது ஏரியில் நீர் நிரம்பியுள்ள நிலையில், 7 அடி ஆழம் வரையிலும் தண்ணீர் ததும்ப காணப்படும் நிலையில், ஏரி தூர்வார ஆங்காங்கே குழிகளும் தோண்டப்பட்டுள்ளது.

கன்னங்குறிச்சி புது ஏரியில் மூன்று மாணவர்கள் குளிக்க சென்றுள்ளனர். அதில் இரண்டு மாணவர்கள் குளித்துக் கொண்டிருக்கும் போது, சேற்றில் சிக்கி தத்தளித்தனர். உடன் சென்ற தமிழ்மணி என்ற சிறுவன் சத்தமிட, அருகில் இருந்தவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றிடுவதற்குள், இருவரும் தண்ணீரில் மூழ்கினர்.

இதுகுறித்து கன்னங்குறிச்சி காவல் நிலையம் மற்றும் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஏரியில் மூழ்கிய மாணவர்களை தேடினர். இரண்டு மணி நேரம் போரட்டத்துக்குப் பின்னர், இரண்டு பேரின் உடலை வீரர்கள் மீட்டனர்.

கன்னங்குறிச்சி போலீஸார் விசாரணையில், கன்னங்குறிச்சி, கோவிந்தசாமி காலனி பகுதியை சேர்ந்த பிரசாந்த் (17), அதேபகுதியை சேர்ந்த பாலாஜி (16) என்பது தெரியவந்தது.

இதில் பிரசாந்த் பிளஸ் 2 வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். பாலாஜி பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். விடுமுறையில் இருந்த மாணவர்கள் ஏரியில் குளிக்க வந்த போது, ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.

இருவரின் உடலை கைப்பற்றிய போலீஸார், உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் ஜெயசீலன் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோடை விடுமுறை காலங்களில் நீர் நிலைகளுக்க சென்று குளிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மாணவர்கள் ஆழம் தெரியாமல் நீர் நிலைகளில் குளித்து ஆபத்தில் சிக்கி கொள்ளும் சம்பவம் நடக்க வாய்ப்பாகிவிடுகிறது. எனவே, பெற்றோர்கள் குழந்தைகளை நீர்நிலை பகுதிகளுக்கு செல்வதை அனுமதிக்காமல், அவர்களை கண்காணிப்பது அவசியமாகியுள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE