சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: பெண் தொழிலாளி உயிரிழப்பு

By இ.மணிகண்டன்

சாத்தூர்: சாத்தூர் அருகே மார்க்கநாதபுரத்தில் பட்டாசு ஆலை ஒன்றில் இன்று மாலை வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்தவர் கேசவன் (50). இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று சாத்தூர் அருகே உள்ள மார்க்கநாதபுரத்தில் இயங்கி வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்தப் பட்டாசு ஆலையில் 90-க்கும் மேற்பட்ட அறைகளில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரித்து வருகின்றனர். இன்றும் வழக்கம்போல் தொழிலாளர்கள் அனைவரும் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று மாலை இந்தப் பட்டாசு ஆலையில் மூலப்பொருள்கள் வைத்திருந்த ஒரு அறையில் திடீரென ரசாயன மாற்றம் ஏற்பட்டு பட்டாசுக்கான மருந்துகள் வெடித்துச் சிதறின. இதில், அருகில் அலுவலகத்தை ஒட்டிய அறையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளும் வெடித்துச் சிதறின. இந்த விபத்தில் அங்கு கணக்காளராகப் பணியாற்றிவந்த ஜெயசித்ரா (24) என்ற பெண் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும், இந்த தீ விபத்தில் தொழிலாளர்களின் 12 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE