நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் கணினிகள் மூலம் டெண்டர் சமர்ப்பித்த ஒப்பந்ததாரர்கள்: சிஏஜி அறிக்கையில் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் கணினிகளைப் பயன்படுத்தி ஒப்பந்ததாரர்கள் டெண்டரை சமர்ப்பித்து உள்ளதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழக நெடுஞ்சாலைத் துறையின் 2016 முதல் 2021 வரையிலான செயல்பாடுகள் குறித்து சிஏஜி எனப்படும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் கணினிகளைப் பயன்படுத்தி ஒப்பந்ததாரர்கள் டெண்டரை சமர்ப்பித்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், "ஒப்பந்ததாரர்களால் ஏலம் சமர்ப்பிக்கப்பட்ட கணினியின் அடையாள முகவரியும், துறை சார்ந்த பயனர்களின் அடையாள முகவரியும் தரவுத் தளம் கைப்பற்றியது. ஏலங்கள் சமர்ப்பிக்கப்பட்ட அடையாள முகவரி மற்றும் துறை பயனர்களுடன் அடையாள முகவரியுடன் ஒப்பிடுகையில், ஒப்பந்ததாரர்கள் தங்களின் ஏலங்களை சமர்ப்பிக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளி கணினிகளைப் பயன்படுத்தியது தெரியவந்தது.

2019 ஆகஸ்ட் முதல் 2021 ஆகஸ்ட் வரை 214 ஒப்பந்தப் புள்ளி அறிவிப்புகளுக்கு பதில் அளிக்கும் விதமாக, 87 ஒப்பந்ததாரர்களால் துறை அதிகாரிகளின் 57 கணினிகளைப் பயன்படுத்தி 289 ஏல ஒப்பந்தங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 71 ஏலங்கள் எல்1 ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக வழங்கப்பட்டன.

ஏலதாரர்கள், துறை சார் கணினிகளின் வாயிலாக ஏலங்களை சமர்ப்பித்தன் மூலம் ஒப்பந்தப் புள்ளி நெறிமுறைகளை மீறியதையும், அதிகபட்ச போட்டி ஏலத்தை பெற வேண்டும் என்ற துறையின் முயற்சியும் நிறைவேறவில்லை.

மே 2022 இறுதி கலந்தாய்வின்போது முதன்மைச் செயலாளர் இதைப் பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார். அரசு இதை ஏற்றக் கொண்டு ஆகஸ்ட் 2022-ல் இதுபோன்ற தவறுகளை ஆய்வு செய்து, இதுபோன்ற செயல்கள் மீண்டும் நிகழாத வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்க அனைத்து ஒப்பந்தப் புள்ளி அழைக்கும் அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக கூறியது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE