தஞ்சாவூர்: தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அமமுக செயலாளரும், ஒரத்தநாடு பேரூராட்சி தலைவருமான மா.சேகர் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் பொதுச் செயலாளர் கே.பழனிசாமி முன்னிலையில் இணைந்தார்.
இதனால் தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கத்தை ஓரங்கட்ட மா.சேகரே சரியான நபர் என அதிமுகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்தவர் மா.சேகர் (61). இவர் எம்ஜிஆர் மீது கொண்டிருந்த பற்றால், கடந்த 1983ம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்தார். 1987ம் ஆண்டு ஒரத்தநாடு நகரச் செயலாளரானார். 2002-ம் ஆண்டு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக பொறுப்பு வகித்தார்.
மேலும், கடந்த 2001-ம் ஆண்டு முதல் தற்போது வரை, 5 ஆண்டுகள் சேகரும், அவரது மனைவி திருமங்கை 10 ஆண்டுகள் என மாறி மாறி தொடர்ச்சியாகப் ஒரத்தநாடு பேரூராட்சி தலைவராக பணியாற்றினர். திருமங்கை தலைவராக இருந்த போது, சேகர் துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ஆதரவாளராக இருந்த சேகர், பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஆனால் வைத்திலிங்கம் அவருக்கு வாய்ப்பு வழங்காமல் கு.பரசுராமனுக்கு வழங்கினார். இதனால் வைத்திலிங்கத்துக்கும் சேகருக்கும் இடையே முட்டல் மோதல் தொடங்கியது. இந்த நிலையில் தான் டிடிவி.தினகரன் அமமுகவை துவங்கிய போது அதில் சேகர் தன்னை இணைத்துக் கொண்டு, வைத்திலிங்கத்து எதிராகவே செயல்படத் தொடங்கினார்.
» 12 மணி நேர பணிச் சட்டம் உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கும்: வைகோ
» உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார் இபிஎஸ்: பொதுச் செயலாளர் ஆன பின்னர் முதன்முறை
தனது மகள் திருமணத்தை ஒரத்தநாட்டில் பெரும் பொருட்செலவில் டிடிவி.தினகரன் தலைமையில் நடத்தி, வைத்திலிங்கத்தை மேலும் எரிச்சல் அடைய வைத்தார்.
அமமுகவில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்த சேகர், டிடிவி.தினகரனிடம் மிகவும் நெருக்கமாக இருந்தார். வைத்திலிங்கத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே ஒரத்தநாடு தொகுதியில் அமமுக சார்பில் மா.சேகர் போட்டியிட்டு தோல்வியை தழுவியதோடு, வைத்திலிங்கத்தை கூடுதலாக செலவு செய்ய வைத்தார்.
மேலும், நடந்த முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், ஒரத்தநாடு பேரூராட்சியில் 15 வார்டுகளில், 9 இடங்களில் அமமுக வெற்றி பெற்றது. இதனால், சேகர் பேரூராட்சி தலைவரானார். தமிழகத்திலேயே சேகர் மட்டுமே அமமுகவின் பேரூராட்சி தலைவர் என்ற பெருமையை பெற்றதோடு, டிடிவி. தினகரனிடம் மேலும் செல்வாக்கை உயர்த்தி காட்டிக் கொண்டார்.
இதற்கிடையில் முன்னாள் அமைச்சரும், ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவான ஆர்.வைத்திலிங்கம் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து கொண்டு, கே.பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் பலரும் பழனிசாமி அணியில் இருப்பதால், வைத்திலிங்கம் தஞ்சாவூரில் தனது செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ள பெரும் பிராயசித்தத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் தான் வைத்திலிங்கத்தின் பரம அரசியல் எதிரியாகவும், அதே நேரத்தில் எதிர் அணியில் இருக்கும் அமமுக மாவட்டச் செயலாளர் சேகரை தங்களது பக்கம் இழுக்க கே.பழனிசாமியின் அணியில் உள்ளவர்களுக்கு முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் ஆலோசனைகளை வழங்கினர்.
அதன்படி சேகர் நேற்று மதியம் அதிமுகவுக்கு செல்ல இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, நேற்று காலையில் டிடிவி.தினகரன் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக கட்சியிலிருந்து சேகரை நீக்குவதாக அறிவித்தார்.
இதையடுத்து நேற்று மதியம் சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி முன்னிலையில் சேகர் அதிமுகவில் தன்னை மீண்டும் இணைத்துக் கொண்டார். அப்போது முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் உள்ளிட்ட தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.
அதே நேரத்தில் நேற்று மதியம் தஞ்சாவூரில் தமிழ்நாடு ஹோட்டலில் தங்கியிருந்த வைத்திலிங்கம், தனது ஆதரவாளர்களுடன், சேகர் அதிமுகவில் இணைந்ததால், ஏதேனும் எதிர்வினை ஏற்படுமா என கலந்தாலோசித்தார்.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், "அதிமுகவில் சேகர் இருந்த காலத்தில் ஒரத்தநாட்டில் மக்களிடம் நன்கு அறிமுகமான நபராக இருந்தார். கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவரிடமும் பழகி வந்தார். ஆரம்ப காலம் மூலம் வைத்திலிங்கத்துக்குப் பக்கபலமாக கட்சியில் பணியாற்றினார். ஆனால், வைத்திலிங்கம் கட்சிக்காகவும், தனக்கு துணையாக இருந்த சேகருக்காக பெரிதாக எதுவும் செய்யாமல், இருந்தால், மனம் வெறுத்துப்போனார். இதனால் தான் சேகர் அவருக்கு எதிராகவே அரசியல் செய்தார். இதனால் கடந்த 2016-ம் ஆண்டு ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கம் தோல்வியை சந்திதார். திமுக வென்றது. பின்னர், வைத்திலிங்கத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக, அமமுகவுக்கு சேகர் மாறினார். 2021 சட்டமன்ற தேர்தலில், வைத்திலிங்கத்துக்கு எதிராக சேகர் தேர்தலில் போட்டியிட்டார்.
தற்போது ஒரத்தநாடு பகுதியில் வைத்திலிங்கத்தை எதிர்க்க கூடிய பலம் பொருந்தியவர் சேகர் மட்டுமே, எனவே அவரை அதிமுகவில் இழுக்க முன்னாள் அமைச்சர் காமராஜ் முயற்சி மேற்கொண்டார். இதனால் தான் அவர் தற்போது அதிமுகவுக்கு வந்துள்ளார். இனிமேல் ஒரத்தநாடு பகுதியில் சேகர் அதிமுகவின் கட்சிப் பணியை திறம்பட செய்வார். அமமுகவிடம் இருந்த ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் பதிவி இனி அதிமுகவுக்கு வந்துவிட்டது எங்களைப் போன்ற அதிமுகவினருக்கு கூடுதல் தெம்பை தந்துள்ளது" என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago