சென்னை: தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் எந்த சட்டமும் தமிழகத்தில் இருக்கக்கூடாது. இதை உணர்ந்து 12 மணி நேர பணிச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் தொழிலாளர்களை 12 மணி நேரம் பணி செய்ய வகை செய்யும் தொழிற்சாலைகள் (தமிழ்நாடு சட்டத்திருத்த) முன்வரைவு 2023 தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் உரிமைகளையும், நலன்களையும் பறித்து, அவர்களை கொத்தடிமைகளாக்கும் இந்த சட்டத் திருத்தம் தவறானது; ஏற்றுக்கொள்ள முடியாதது.
தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள 1948-ஆம் ஆண்டின் தொழிற்சாலைகள் சட்டத்தின்படி ஒரு நாளைக்கு 8 & 9 மணி நேரம் என வாரத்திற்கு 48 மணி நேரம் பணி செய்ய வேண்டும். இந்த வழக்கத்தை மாற்றி ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என 4 நாட்களில் 48 மணி நேரம் பணி செய்ய வேண்டும்; மீதமுள்ள 3 நாட்களை விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம் அல்லது ஒவ்வொரு நாளும் கூடுதலாக பணி செய்த நேரத்திற்கு உரிய ஊதியத்தை தனியாக பெற்றுக் கொள்ளலாம் என்பது தான் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்திருத்தத்தின் அடிப்படை ஆகும்.
ஒரு நாளைக்கு 12 மணி நேரச் சட்டம் அனைத்துத் தொழிற்சாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படாது; விருப்பமுள்ள தொழிலாளர்கள் மட்டும் 12 மணி நேர பணி முறையை ஏற்றுக் கொள்ளலாம் என்றும், இந்த சட்டத்தை செயல்படுத்துவதற்காக உயர்நிலைக்குழு அமைக்கப்படும் என்றும் தமிழக அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த விளக்கங்களும், விதிகளும் ஏட்டுச் சுரைக்காயாக மட்டுமே இருக்கும். காலப்போக்கில் அனைத்து பணியாளர்களும் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என வாரத்திற்கு 6 நாட்கள் பணி செய்யும்படி கட்டாயப்படுத்தப்படுவார்கள்; அதற்காக அவர்களுக்கு கூடுதல் ஊதியம் எதுவும் வழங்கப்படாது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து கொத்தடிமைகளாக்குவது தான் இந்த சட்டத்திருத்தத்தின் விளைவாக இருக்கும்.
» வேங்கைவயல் விவகாரம்: காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை; விரைவில் 11 பேரிடம் மரபணு சோதனை
அப்படிப்பட்ட சூழல் ஏற்படாது; இந்த சட்டத்தின் விதிகள் முறையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வோம் என்று அரசுத் தரப்பில் வாதிடப்படலாம். ஒருவேளை இந்த சட்டத்தின் விதிகள் அப்படியே செயல்படுத்தப்பட்டாலும் அது மனித குலத்திற்கு எதிரானது தான். ஒரு நாளில் 24 மணி நேரம் என்பது பணி செய்ய 8 மணி நேரம், உறங்குவதற்கு 8 மணி நேரம், குடும்பத்தினருடன் பொழுதைக் கழிக்கவும், பிற பணிகளுக்காகவும் 8 மணி நேரம் என பகிர்ந்து கொள்ளப்படுவது தான் உடல் நலன் சார்ந்தும், மனநலன் சார்ந்தும் மிகச்சரியானது ஆகும். அதை விடுத்து 12 மணி நேரத்திற்கு ஒருவர் பணி செய்ய வேண்டும் என்றால், அலுவலகத்திற்கு சென்று திரும்புதல், அதற்கு அணியமாதல் என குறைந்தது 4 மணி நேரம் செலவிட வேண்டியிருக்கும். மீதமுள்ள 8 மணி நேரத்தை உறங்குவதற்கும், குடும்பத்தினருடன் பொழுதைக் கழிக்கவும் எந்த விகிதத்தில் பகிர்ந்து கொண்டாலும் அது அவர்களின் உடலையும், மன நலனையும் கடுமையாக பாதிக்கும். இது கண்களை விற்று சித்திரம் வாங்கும் செயல்.
1991-ஆம் ஆண்டில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்தே, பன்னாட்டு நிறுவனங்களின் வணிக நலன்களுக்காகவும், அவற்றின் உற்பத்தியையும், இலாபத்தையும் பெருக்குவதற்காகவும் தொழிலாளர்களின் நலன்கள் பலி கொடுக்கப்பட்டு வருகின்றன; அவர்களின் உழைப்பு அவர்களுக்கே தெரியாமல் சுரண்டப்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில் தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கம் எத்தனை வகையான புதிய நோய்களுக்கு ஆளாகி உள்ளனர் என்பதிலிருந்தே மாற்றிமையக்கப்பட்ட பணி நேரமும், கூடுதல் பணி நேரமும் மனிதர்களுக்கு எத்தகைய உடல்நல மற்றும் மனநல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
தமிழ்நாட்டில் இயற்றப்பட்டுள்ள 12 மணி நேரச் சட்டம் என்பது உழைக்கும் வர்க்கத்திற்கு கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட உடல் மற்றும் மனநலன் சார்ந்த பாதிப்புகளை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்துச் செல்லும். மொத்தத்தில் இந்த சட்டம் தொழிலாளர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும்.
8 மணி நேர வேலை என்பது நூற்றாண்டுக்கும் கூடுதலாக போராடிப் பெறப்பட்ட உரிமை ஆகும். அவ்வாறு உரிமை பெறப்பட்டதை அடுத்த ஒரு வாரத்தில் ஒட்டுமொத்த உலகமும் கொண்டாடவிருக்கும் நிலையில், இப்படி ஒரு உரிமைப்பறிப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்து நிறைவேற்றியதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மத்தியில் ஆளும் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் ஆளும் மாநிலங்களில் மட்டுமே இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் கொள்கைகளை எதிர்ப்பதாகக் கூறிக் கொள்ளும் தமிழ்நாட்டில் இந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய தேவை என்ன?
தொழிலாளர்களின் உரிமைகளுக்கும் சென்னைக்கும் நூற்றாண்டுகளைக் கடந்த உறவு உண்டு. சரியாக நூறாண்டுகளுக்கு முன் 1923&ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி சென்னையில் தான், இந்தியாவிலேயே முதன்முறையாக மே நாள் கொண்டாடப்பட்டது. சிங்காரவேலர் தான் மே நாளைக் கொண்டாடினார். தொழிலாளர்களின் உரிமைகளுக்காக மிகக்கடுமையான போராட்டங்களை நடத்திய தமிழ்நாட்டில் இப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கக் கூடாது. தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் எந்த சட்டமும் தமிழகத்தில் இருக்கக்கூடாது. இதை உணர்ந்து 12 மணி நேர பணிச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago