வேங்கைவயல் விவகாரம்: காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை; விரைவில் 11 பேரிடம் மரபணு சோதனை

By செய்திப்பிரிவு

சென்னை: வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக ஆயுதப்படை போலீஸ்காரர் உட்பட 2 பேரிடம்
சென்னையில் உள்ள தடய அறிவியல் துறை சோதனைக் கூடத்தில் குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. போலீஸாரின் சந்தேக வளையத்தில் சிக்கியுள்ள 11 பேரிடம் ரத்த மாதிரி எடுத்து விரைவில் மரபணு சோதனை நடத்தப்பட உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டிருப்பது கடந்த 2022 டிசம்பர் 26-ம் தேதி தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் வன்கொடுமை வழக்காக பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வந்தது.

முதல்கட்டமாக, குடிநீர் தொட்டியில் இருந்து மனிதக் கழிவு, தண்ணீர் ஆகியவற்றின் மாதிரிகளை எடுத்து, சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றியது. டிஎஸ்பி பால்பாண்டி தலைமையிலான சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுவரை 147 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

தொட்டியின் நீரை பகுப்பாய்வு செய்ததில், அதில் கலக்கப்பட்ட மனிதக் கழிவு ஒரு பெண், 2 ஆண்களுடையது என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 11 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இவர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட வேண்டும். இதற்கிடையே, வேங்கைவயலை சேர்ந்த புதுக்கோட்டை ஆயுதப்படையில் பயிற்சி காவலராக உள்ள முரளி ராஜா (32), அதே ஊரை சேர்ந்த கண்ணதாசன் (32) ஆகியோர் இந்தச் சம்பவம் குறித்து வாட்ஸ் அப் குழு தொடங்கி, சில ஆடியோக்களை பகிர்ந்துள்ளனர்.

அந்த ஆடியோவில் பிரச்சினைக்குரிய விஷயங்கள் உள்ளதால், அதன் உண்மைத் தன்மை குறித்து கண்டறிய, அவர்களிடம் குரல் மாதிரி பரிசோதனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் மனு தாக்கல் செய்தனர்.

விரைவில் மரபணு சோதனை: இதற்கு நீதிபதி அனுமதி அளித்தார். இதையடுத்து, சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள தமிழக காவல் துறையின், தடய அறிவியல் துறை சோதனைக் கூடத்தில் முரளி ராஜா, கண்ணதாசன், ஆகியோரிடம் நேற்று குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையே, போலீஸாரின் சந்தேக வளையத்தில் சிக்கியுள்ள 11 பேரிடம் ரத்த மாதிரி எடுத்து விரைவில் மரபணு சோதனை நடத்தப்பட உள்ளது. அவர்களில் இருவரிடம்தான் தற்போது குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சிபிசிஐடி போலீஸார் கூறியபோது, "குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது தொடர்பாக ஒரு வாட்ஸ் அப் குழுவில் உரையாடல் நடந்திருப்பது, சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. அந்த வாட்ஸ் அப் உரையாடல் குறித்து 2 மாதங்களுக்கு முன்பு 7 பேருக்கு சம்மன் அளித்து, திருச்சிக்கு வரவ்ழைத்து விசாரணை நடத்தப்பட்டது. தற்போது அதில் 2 பேருக்கு மட்டும் குரல் பரிசோதனை நடத்த முடிவெடுக்கப்பட்டது.

வாட்ஸ் அப் குழுவில் பதிவிடப்பட்ட குரல் பதிவுக்கும், பதிவிடப்பட்டோருக்கும் தொடர்பு இருக்கிறதா என கண்டறிவதற்காக இந்த சோதனை
நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனை முடிவு கிடைத்ததும், இந்த வழக்கில் துப்பு துலங்கிவிடும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE