மேட்டுப்பாளையத்தில் பலத்த காற்றுடன் மழை - வாழை மரங்கள் முறிந்து

By செய்திப்பிரிவு

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.

அதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. முதலில் மெதுவாக பெய்யத் தொடங்கிய மழை, பின்னர் அதிகரித்தது. சில மணி நேரத்துக்கு பிறகு மழை ஓய்ந்தது. இதற்கிடையே, மழை பெய்யத் தொடங்கிய சிறிது நேரத்தில் காற்றின் வேகம் அதிகரித்து சூறைக் காற்று சுழன்றடிக்க தொடங்கியது. இதனால் நகர பகுதியில் ஆங்காங்கே சாலையோர மரங்களும் விளம்பரப் பதாகைகளும் காற்றில் சரிந்து விழுந்தன.

மேலும், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த ஏராளமான வாழை மரங்கள் சூறைக்காற்றின் வேகத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் முறிந்து விழுந்தன. மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையோரம் இருந்த மரம் சரிந்து விழுந்ததில், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, மழையால் மேட்டுப்பாளையம் பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE