சென்னை: “தமிழக அரசு கொண்டுவந்துள்ள வேலைநேர அதிகரிப்பு சட்டத்தை ஏற்க முடியாது. இம்மசோதா மீது தத்தமது எதிர்ப்புகளை பதிவு செய்த தமிழக கட்சிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு சட்டமன்றம் தொழிலாளர்களின் வேலைநேரத்தை அதிகரிக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றி இருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ள அனைத்து கட்சிகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது.
இந்த மசோதாவை எந்த வகையிலும் ஏற்க முடியாது. 150 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமையை தமிழ்நாடு அரசாங்கம் நெகிழ்வுத்தன்மை என்ற ஒன்றைச்சொல்லி அதை இல்லாமல் செய்வது தவறான நடவடிக்கை, தவறான முன்னுதாரணம்; மாற்ற முடியாத பழிச்சொல்லுக்கு அரசு ஆளாக நேரிடும். பாஜக ஏற்கெனவே கொண்டு வந்துள்ளதை அனைவரும் எதிர்த்துள்ளோம்.
இந்தியாவிலேயே இந்த மசோதாவை பாஜக அல்லாத ஒரு மாநில அரசு கொண்டு வந்திருப்பது தமிழ்நாடு அரசுதான். 2019-ம் ஆண்டு தேசிய புள்ளியியல் துறை இந்தியாவில் நேரப் பயன்பாடு குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் இந்திய நகர்ப்புற உழைப்பாளர்கள் வாரத்திற்கு 60 மணி நேரம், 47 நிமிடங்களும் நேரடியாக வேலை மற்றும் வேலை தொடர்பான காரணங்களுக்கான செலவிடுகிறார்கள் என்று சொல்லியிருக்கிறது. எட்டுமணிநேர வேலை சட்டப்படியாக இருக்கும்பொழுதே இந்த நிலைமை என்றால் அரசு சொல்கிற நெகிழ்வுத்தன்மை வந்துவிட்டால் என்ன நிலைமை ஏற்படும் என்பது விளங்கும்.
» “உதயநிதி, சபரீசன் குறித்த பழனிவேல் தியாகராஜன் ஆடியோ... முதல்வர் மவுனம் காப்பது அநீதி” - அண்ணாமலை
» ஆதி புஷ்கர விழா: மே 3 வரை புதுச்சேரி வில்லியனூரில் போக்குவரத்து மாற்றம்
அதிக அளவு தொழிலாளர்கள் வேலை வாங்கப்படும் நாடுகளில் காம்பியா, மங்கோலியா மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் மட்டும்தான் இந்தியாவிற்கு பின்னே இருப்பதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்திருக்கிறது. 2020ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு வேலைநேரத்தை அதிகரிக்க முயற்சித்தபோது அதை திமுக கடுமையாக எதிர்த்ததை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மேலும், ஒன்றிய அரசும் இந்த முயற்சிக்கு எதிராக திமுக, பாஜக ஆளும் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் எட்டுமணி நேர வேலை நேரத்தை பன்னிரெண்டு மணி நேரமாக உயர்த்தியதற்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தையும் தெரிவித்தது.
நிலைமை இப்படி இருக்கையில், நெகிழ்வுத்தன்மை என்பது தொழிலாளியை ஒட்டச்சுரண்டவும், முதலாளிகளுக்கு உறிஞ்சி கொடுக்கவுமே வழிவகுக்கும். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் வேலை நேரம் படிப்படியாக குறைக்கப்பட வேண்டும். கலைஞர் கூட இந்த கருத்தை கடந்த காலத்தில் முன்வைத்திருக்கிறார். தொழிலாளர் நலனுக்கு முரணாகவும் சட்ட நியாயங்களுக்கு புறம்பாகவும் இந்த சட்டத் திருத்தம் இருக்கிறது.
தேவைப்படும் காலங்களில் தொழிற்சாலை ஆய்வாளரிடம் அனுமதி பெற்று நெகிழ்ச்சியான வேலைநேரத்தை பெறுவதற்கு வாய்ப்பிருந்தும் வேலைநேரம் குறித்த எந்த சட்டத்திற்கும் மதிப்பளிக்கவேண்டியதில்லை என்பதற்கான ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வந்திருப்பது சட்டத்தின் ஆட்சிக்கு பதிலாக சட்டங்களே தேவையில்லை என்பதற்காக சட்டம் இயற்றுவதாகும். தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த மசேதாவை கைவிடுவதாக அறிவிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறது.
இது 150 ஆண்டுகாலம் போராடி, பலர் உயிர்துறந்து, பலர் வேலை இழந்து, குடும்பத்தை இழந்து சிறைக்குச்சென்று பெற்ற உரிமைகளை எந்த காரணத்திற்காகவும் இழக்க முடியாது, இழக்கக்கூடாது. எனவே, இந்த மசோதா சட்டமாகாமல் கைவிடப்பட வேண்டும் என்கிற கோரிக்கையோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக தொடர்ச்சியாக போராடும். அனைத்து ஜனநாயக சக்திகளும் தங்களால் இயன்ற அனைத்து வகைகளிலும் போராடுவதோடு ஒன்றுபட்ட போராட்டத்திற்கும் வெற்றிபெறும் வரை போராடுவதற்கும் முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago