ஆதி புஷ்கர விழா: மே 3 வரை புதுச்சேரி வில்லியனூரில் போக்குவரத்து மாற்றம்

By அ.முன்னடியான்

புதுச்சேரி: காசிக்கு வீசம்பெற்ற திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோயில் சங்கராபரணி ஆதி புஷ்கர விழா நாளை தொடங்கி வரும் மே 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் சுற்றுவட்டார பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி போலீஸ் சீனியர் எஸ்பி நாரா சைதன்யா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: "புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அடுத்த திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோயிலில் நாளை (ஏப். 22) முதல் மே 3-ம் தேதி வரை ஆதி புஷ்கர விழா நடைபெறுகிறது. இவ்விழாவுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சங்கராபரணி ஆற்றில் புனித நீராடி வழிபடுவர். இதற்காக விரிவான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வில்லியனூர் மார்க்கமாக வரும் பக்தர்கள், வில்லியனூர் கோட்டைமேடு சந்திப்பு ஆச்சாரியா கல்லூரி - உறுவையாறு சந்திப்பு - மேல் திருக் காஞ்சி வழியாக கெங்கவராக நதீஸ்வரர் கோயிலுக்கு செல்லலாம். முருங்கப்பாக்கம் மார்க்கமாக வரும் பக்தர்கள் ஒதியம்பட்டு - மணவெளி ரோடு சந்திப்பு நித்யா பேக்கேஜிங் தனியார் கம்பெனி - காசி விஸ்வநாதர் ஆலயம் - திருக்காஞ்சி புதிய பாலம் வழியாக கெங்கவராக நதீஸ்வரர் ஆலயத்தை வந்தடையலாம்.

கடலூர் மார்க்கமாக வரும் பக்தர்கள் தவளக்குப்பம் அபிஷேகப்பாக்கம், கீழ் அக்ரஹாரம், திருக்காஞ்சி வழியாக கெங்கவராக நதீஸ்வரர் ஆலயத்தை வந்தடையலாம். உறுவையாறு சந்திப்பு வழியாக வரும் இருசக்கர வாகனங்கள் திருக்காஞ்சி சன் மெகாசிட்டி காலியிடத்திலும், ஆண்டியார்பாளையம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி அங்குள்ள காலியிடத்திலும் நிறுத்த வேண்டும். நான்கு சக்கர வாகனங்கள், மேல் திருக் காஞ்சி அபிராமி டைல்ஸ் கடைக்கு அருகிலும், ஆனந்தா நகர் - பாலமுருகன் நகர் சந்திப்பில் வலதுபுறமாகத் திரும்பி அங்குள்ள காலியிடத்திலும் நிறுத்த வேண்டும்.

அதேபோல் தவளக்குப்பம் - அபிஷேகப் பாக்கம் வழியாக வரும் நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் கீழ்அக்ரஹாரம் அங்காள பரமேஸ்வரி கோயிலுக்கு எதிரில் இருக்கும் காலி மைதானத்தில் நிறுத்த வேண்டும். ஒதியம்பட்டு - மணவெளி சந்திப்பு வழியாக வரும் நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் காசி விஸ்வநாதர் கோயில் வடக்குப் பகுதியில் இருக்கும் காலியிடத்தில் நிறுத்தவேண்டும். மேலும் நித்யா பேக்கேஜிங் தனியார் கம்பெனிக்கு எதிரேயுள்ள காலியிடத்தில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தின் (பிஆர்டிசி) சார்பில் பக்தர்களின் வசதிக்காக காசி விஸ்வநாதர் கோயிலில் இருந்து திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோயிலுக்கு சென்று வர மினி பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. மே 3-ம் தேதி வரை வில்லியனூர் கோட்டைமேடு சந்திப்பிலிருந்து உறுவையாறு - கரிக்கலாம்பாக்கம் வழியாகவும், வில்லியனூர் கோட்டைமேடு சந்திப்பிலிருந்து ஒதியம்பட்டு சந்திப்பு வழியாகவும் கனரக வாகனங்கள் சென்று வர அனுமதியில்லை.

அதேபோல் முருங்கப்பாக்கம் சந்திப்பிலிருந்து ஒதியம்பட்டு வழியாக வில்லியனூர், கோட்டைமேடு சந்திப்புக்கு கனரக வாகனங்கள் செல்ல அனுமதியில்லை" என நாரா சைதன்யா கூறியுள்ளார். பேட்டியின்போது எஸ்பிக்கள் வம்சிதரெட்டி, மோகன்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE