சென்னை: “பொறியியல் படிப்புக்கான முதல் பருவத் தேர்வுகளில், கட்டாயத் தமிழ்மொழிப் பாடத் தேர்வை ஆங்கிலத்தில் எழுத மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழை இழிவுபடுத்தும் இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் படிப்புக்கான முதல் பருவத் தேர்வுகளில், கட்டாயத் தமிழ் மொழிப்பாடமான தமிழர் மரபு பாடத்தாளுக்கான தேர்வு, மாநிலம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இன்று நடத்தப்பட்டுள்ளது. கட்டாயத் தமிழ்மொழிப் பாடத் தேர்வை ஆங்கிலத்தில் எழுத மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழை இழிவுபடுத்தும் இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது.
பட்டப்படிப்பு வரை தமிழ் மொழிக் கட்டாயப்பாடமாக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்த குரல்களின் பயனாக நடப்பாண்டு முதல் பொறியியல் படிப்பில் முதலாமாண்டின் இரு பருவங்களிலும் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. முதல் பருவத்தில் தமிழர் மரபு என்ற பாடமும், இரண்டாவது பருவத்தில் தமிழரும் தொழில்நுட்பமும் என்ற பாடமும் கற்பிக்கப்படும்; அதற்கான தேர்வை அனைவரும் எழுத வேண்டும்.
தமிழ்நாட்டில் தமிழை ஒரு பாடமாக படிக்காமல் பள்ளிப்படிப்பை நிறைவு செய்ய முடியும்; தமிழை ஒரு பாடமாக படிக்காமல் கல்லூரிப் படிப்பை படிக்க முடியும் என்ற நிலை தமிழகத்தில் இன்றும் நிலவுகிறது. இத்தகையச் சூழலில் இனி எவரும் தமிழை ஒரு பாடமாக படிக்காமல் பொறியியல் படிப்பை நிறைவு செய்ய முடியாது என்ற நிலை இதன் மூலம் உருவாக்கப்பட்டது. அரசின் இந்த முடிவை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நான் வரவேற்றேன். ஆனால், இப்போது தமிழ் பாடத்தேர்வை ஆங்கிலத்தில் எழுத அனுமதித்ததன் மூலம் அந்த நம்பிக்கையும், மகிழ்ச்சியும் சிதைக்கப்பட்டு விட்டன.
» “பாஜக அரசின் தொழிலாளர் விரோத சட்டத்தின் நீட்சியே தமிழ்நாடு திருத்தச் சட்டம்” - முத்தரசன் காட்டம்
» 4 நாள் வேலை, 3 நாள் ஓய்வு... 12 மணி நேர வேலை மசோதா யாருக்கெல்லாம் பொருந்தும்? - அமைச்சர் விளக்கம்
தமிழ்நாட்டில் இன்று நடத்தப்பட்ட தேர்வின் வினாத்தாளில் தமிழர் மரபு என்ற பாடத்தாளின் தலைப்பு கூட தமிழில் அச்சிடப்படவில்லை. மாறாக Heritage of Tamils என்று ஆங்கிலத்தில் தான் அச்சிடப்பட்டுள்ளது. பெரும்பான்மையான மாணவர்கள் பொறியியலை ஆங்கிலத்தில் படிப்பவர்கள் என்பதால், தமிழ் பாடத்தாளையும் ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதித்ததாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் தமிழுக்கு எதிரான இந்த விளக்கத்தை ஏற்க முடியாது. தமிழ்நாட்டு மாணவர்களின் தாய்மொழி தமிழ் என்பதால், ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள் தாய்மொழியான தமிழில் தேர்வெழுத அனுமதிப்பது வழக்கமானது. இந்த தளர்வு கூட மொழிப்பாடங்களுக்கு பொருந்தாது. ஆங்கில மொழித் தேர்வை தமிழில் எழுத எந்த கல்வி நிறுவனமும் அனுமதிக்காது.
அவ்வாறு இருக்கும் போது தமிழ் மொழிப்பாடத் தேர்வை மட்டும் ஆங்கிலத்தில் எழுத எவ்வாறு அனுமதிக்க முடியும்? தமிழர் மரபு பாடத்தாளில் கேட்கப்பட்ட செம்மொழி, தெருக்கூத்து, நடுகல் போன்றவை குறித்து தமிழில் தான் பாடங்கள் நடத்தப்பட்டிருக்கும். அவ்வாறு தமிழில் நடத்தப்பட்ட பாடங்களை ஆங்கிலத்தில் எவ்வாறு எழுத முடியும்? தமிழில் நடத்தப்பட்ட பாடங்களை புரிந்து கொண்ட மாணவர்களால் அதை தமிழில் எழுத முடியாதா?
பொறியியல் பயிலும் மாணவர்கள் தமிழ் மொழிப் பாடத்தை கட்டாயமாக படிக்க வேண்டும் என்பதற்காகத் தான் தமிழ் கட்டாயப் பாடம் அறிமுகம் செய்யபட்டது. ஆனால், அதற்கு தொடக்கத்தில் ஆசிரியர்கள் அமர்த்தாமல் தமிழ் தெரிந்த பொறியியல் ஆசிரியர்களைக் கொண்டே பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்தேன்.
அதன் பிறகு தான் தமிழ் ஆசிரியர்களை தற்காலிகமாக அமர்த்த அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்தது. ஆனால், இப்போது தமிழ்ப் பாடத் தேர்வையே ஆங்கிலத்தில் எழுத அனுமதித்தால், எதற்காக கட்டாயத் தமிழ்ப் பாடத்தை தமிழ்நாடு அரசும், அண்ணா பல்கலை.யும் அறிமுகம் செய்ய வேண்டும்? அவ்வாறு அறிமுகப்படுத்தியதன் நோக்கமே சிதைந்து விடாதா?
அண்ணா பல்கலைக்கழகம் இங்கிலாந்தில் இல்லை. அதில் படிப்பவர்களும் ஆங்கிலேயர்கள் இல்லை. இத்தகைய சூழலில் தமிழ்மொழிப் பாடத்தை ஆங்கிலத்தில் எழுத அனுமதிப்பதை தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தாய்மொழிக்கு உரிய மரியாதையும், முன்னுரிமையும் அளிக்காத நாடு முன்னேறாது. இதை உணர்ந்து தமிழ்மொழிப் பாடத்தேர்வை மாணவர்கள் தமிழிலேயே எழுதுவதை அண்ணா பல்கலைக் கழகம் உறுதி செய்ய வேண்டும். ஆங்கிலத்தில் எழுதிய மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
5 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago