துரைமுருகனின் ‘சேட்டைகள்’ முதல் ‘அய்யாத்துரை’ பின்புலம் வரை - பேரவையில் கவனம் ஈர்த்த ‘சம்பவங்கள்’!

By செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது. கடந்த 21 நாட்களாக பட்ஜெட் மற்றும் துறை ரீதியான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அத்துடன், தினசரி காலை முதல் ஒரு மணி நேரம் கேள்வி நேரம் நடைபெற்றது. இந்தக் கூட்டத் தொடரில் இதுவரை நடந்த ருசிகர சம்பவங்களின் தொகுப்பு இங்கே:

டென்ஷன் ஆன சபாநாயகர் அப்பாவு: கேள்வி நேரத்தின்போது, சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் கேள்விக்கு மீன்வளத் துறை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதில் அளித்துக்கொண்டு இருந்தார். அப்போது அவையில் உறுப்பினர்கள் இடம் மாறி அமர்ந்து இருந்தனர். இதனையடுத்து சபாநாயகர் அப்பாவு, "உறுப்பினர்கள் எல்லாரும் அவரவர் இடத்தில் அமருங்கள். இது லைவ் ப்ரோகிராம். எல்லாரும் லைவ்ல பார்த்துட்டு இருக்காங்க. உங்கள் இஷ்டத்திற்கு ஒவ்வொரு இடத்தில் அமர்ந்து பேசாதீர்கள்" என்று கடிந்துகொண்டார். இதுபோன்று பல முறை உறுப்பினர்களை சபாநாயகர் அப்பாவு கண்டித்தார்.

பெண்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க காரணம்? - கேள்வி நேரத்தின்போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர், கல்வியில் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். மதிப்பெண்கள் அதிகம் எடுப்பதிலும் முதலிடம் பிடிப்பதிலும் பெண்கள்தான். ’பெண்கள்’ அதனால் மதிப்’பெண்கள்’ அதிகமாக எடுக்கிறார்கள் என்று ரைமிங்காக பேசினார்.

200 ஏக்கர் மாந்தோப்பு: கேள்வி நேரத்தில் பேசிய மாதவரம் சுதர்சனம், “மாதவரத்திற்கு டெக் சிட்டி கொண்டுவர அமைச்சர் வழிவகை செய்ய வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்த அமைச்ச மனோ தங்கராஜ், “இடவசதிகள் இருந்தால் முதலமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டு அது பரிசீலிக்கப்படும்” என்று கூறினார். பிறகு அவை முன்னவர் துரைமுருகன், “சுதர்சனம் என்னிடம், அவருக்கு 500 ஏக்கரில் மாந்தோப்பு இருக்கிறது. அதில் 200 ஏக்கர் இது அமைக்கிறதுக்கு கொடுக்கிறேன்னு சொல்றாரு. அதை அமைச்சர் வாங்கிக்கணும்” என்று கூறினார்.

மலைகளின் சிற்றரசி: கேள்வி நேரத்தின்போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன், “மலைகளின் அரசி ஊட்டி, மலைகளின் இளவரசி கொடைக்கானல். ஆனால், இன்றைக்கு சிறுமலை மலைகளின் சிற்றரசியாக வளர்ந்து கொண்டிருக்கிறது" என்று தெரிவித்தார். அப்போது, அமைச்சர் தங்கம் தென்னரசு எழுந்து, “மலைகளின் அரசி இருக்கிறது. மலைகளின் இளவரசி கேள்விப்பட்டு இருக்கிறோம். நத்தம் விஸ்வநாதன் ’மலைகளின் சிற்றரசியை’ கண்டுபிடித்து உள்ளார். மலைகளின் அரசி கா.ராமச்சந்திரனின் ஊர், மலைகளின் சிற்றரசி நத்தம் விஸ்வநாதனின் ஊர். எனவே ’அரசி, சிற்றரசியை கவனித்துக் கொள்ள வேண்டும்’ என்று பேசினார். அப்போது துரைமுருகன், “அப்போ எங்கள் ஏலகிரி என்னா?” என்று கேட்டதால் சிரிப்பலை எழுந்தது.

மாம்பழம் வழங்கிய பாமக எம்எல்ஏ: சேலம் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் 5 டன் சேலத்து மாம்பழங்களை கொண்டு வந்து அமைச்சர்கள், அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கினார். ரசாயன பொருள்கள் எதுவும் வைக்காமல் இயற்கை முறையில் அறுவடை செய்யப்பட்ட அல்போன்சா, இமாம் பசந்த் ஆகிய மாம்பழங்களை, அருளின் உதவியாளர்கள், எம்.எல்.ஏ விடுதிக்கு சென்று ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களின் அறையும் கதவைத் தட்டி மாம்பழ பெட்டிகளை வழங்கினர்.

முதல்வரின் முதல் பெயர்: காவல் துறை மானியக் கோரிக்கையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “அமைச்சர் உதயநிதி, தனது துறையின் சார்பில் நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்துப் பேசியபோது தலைவர் கருணாநிதி பேசிய ஒன்றைச் சுட்டிக் காட்டினார். பேரறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் இருந்த அமைச்சர்களின் ஒவ்வொரு துறையையும் குறிப்பிட்ட தலைவர் கருணாநிதி, நாம் வகிக்கக் கூடிய துறைகள் வேறுபட்டிருந்தாலும் நாம் அனைவரும் ‘அண்ணாத்துரை’-யைச் சேர்ந்தவர்கள் என்று தலைவர் கருணாநிதி குறிப்பிட்டதாகச் இங்கே எடுத்துச் சொன்னார். உண்மைதான். எனக்கு தலைவர் கருணாநிதி முதலில் வைக்க நினைத்த பெயர் என்னவென்றால், அய்யாத்துரை! எனவே, அமைச்சர்கள் அனைவரும் தனித்தனி துறையை வகித்தாலும் நீங்கள் அனைவரும் இந்த அய்யாத்துரையின் ரத்த நாளங்கள்தான்" என்று பேசினார்.

ஊட்டியில் சட்டப்பேரவை கூட்டம்: சட்டப்பேரவை கூட்டத்தை ஊட்டியில் நடத்த வேண்டும் என பாமக எம்எல்ஏ அருள் கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்த அவை முன்னவர் துரைமுருகன், "அந்தக் காலத்தில் ஏசி வசதி இல்லாததால் ஊட்டில் கூட்டம் நடைபெற்றது. தற்போது, ஊட்டியை விட அதிக குளிரில் ஏசி இயக்கப்பட்டு சட்டப்பேரவை நடந்து வருகிறது" என்று தெரிவித்தார்.

கையெடுத்து கும்பிட்டு கோரிக்கை: பேரவையில் பேசிய அவை முன்னவர் துரைமுருகன், "கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன். எம்எல்ஏக்கள் உங்கள் தலைவரை புகழ்ந்து பேச வேண்டாம். மன்றத்தில் அவையெல்லாம் உகந்தது இல்லை. என் தலைவன் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. மரியாதை உண்டு. உங்களுக்கும் உண்டு. அதனால்தான் ஆங்காங்கே கட்டுப்பட்டு உட்கார்ந்து இருக்கிறோம். எனவே வர்ணனையை விடுங்கள். முக்கிய பொருளைப் பேசுங்கள்" என்று தெரிவித்தார்.

ராஜ்பவனில் சட்டமன்றம்: விவாதத்தின் போது உறுப்பினர்கள் புதிய சட்டமன்றம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு பதில் அளித்த அவை முன்னவர் துரைமுருகன்," முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஆட்சிக் காலத்தில் ஒரு புதிய சட்டமன்றத்தை கட்டுவார். சென்னையில் ராஜ்பவனை எடுத்துக் கொள்ளுங்கள். அது நம்முடைய இடம்தான். கிண்டி ரேஸ் கோர்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். 700 ஏக்கர் கொண்ட இடம். அவர்கள் பணம் கட்ட முடியாத நிலையில் உள்ளார்கள், அதையும் எடுக்கலாம். முதல்வர் எங்கு வேண்டுமானாலும் கட்டலாம்" என்று தெரிவித்தார்.

சிடி போட்டு வைத்திருக்கும் அப்பாவு: எதிர்க்கட்சி தலைவர் பேசுவதை நேரடியாக ஒளிபரப்பு வேண்டும் என்று தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதற்கு பதில் அப்பாவு, "கேள்வி நேரம் தவிர்த்து நேரமில்லா நேரத்தில் கேட்கப்படும் கேள்விகளை ஒளிபரப்பு செய்யச் சொல்லி கேட்கிறீர்கள். அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை முன்வரிசையில் அமர்ந்திருக்கிற அனைவரும் பேசுகிறார்கள். எனவே, அதை நேரடி ஒளிபரப்பு செய்வதில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் அவை எப்படி நடந்தது என்பதை ஒரு சிடி-யில் பதிவுசெய்து வைத்திருக்கிறேன்" என்றார். | இதேபோன்ற சம்பவங்களின் முந்தைய பகுதியை வாசிக்க > மீன் விருந்து முதல் ஐபிஎல் பாஸ் வரை: தமிழக சட்டப்பேரவையில் கவனம் ஈர்த்த ‘சம்பவங்கள்’

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE