ரம்ஜான் பண்டிகை | கேரள வியாபாரிகள் வராததால் வெறிச்சோடிய ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை

By ஆ.நல்லசிவன்

ஒட்டன்சத்திரம்: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கேரள வியாபாரிகள் வராததால் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள காய்கறி சந்தை தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய சந்தைகளில் ஒன்று. இங்கிருந்து தினமும் 60 சதவீதம் காய்கறிகள் கேரளாவுக்கு விற்பனைக்கு செல்கின்றன. மேலும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் இருந்து காய்கறிகள் வாங்கிச் சென்று வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். தினமும் ரூ.2 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நாளை (ஏப்.22) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனால் நேற்றும், இன்றும் கேரள வியாபாரிகள் காய்கறிகள் வாங்க ஒட்டன்சத்திரம் சந்தைக்கு வரவில்லை. இது குறித்து முன்கூட்டியே அவர்கள் தெரிவித்துவிட்டதால் உள்ளூர் விவசாயிகளும் சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வரவில்லை.

இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை வியாபாரிகள், விவசாயிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. நாளை (ஏப்.22) சனிக்கிழமை சந்தை விடுமுறை என்பதால் அடுத்த நாளான நாளை மறுநாள் ஏப்.23-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை வழக்கம் போல் சந்தை இயல்பு நிலைக்கு திரும்பும் என வியாபாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.

இது குறித்து ஒட்டன்சத்திரம் வியாபாரிகள் கூறுகையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கேரள வியாபாரிகள் வராததால் லட்சக் கணக்கிலான வர்த்தகம் பாதித்துள்ளது. வியாபாரிகள் வராததை அறிந்து விவசாயிகளும் மார்க்கெட்டிற்கு வரவில்லை. வழக்கமான காய்கறி விற்பனை ஏப்.23 ஞாயிற்றுக்கிழமை இருக்கும் என நம்புகிறோம், என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE