சென்னை: காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையிட்டு சிறுவாணியின் குறுக்கே கேரள அரசு அத்துமீறி தடுப்பணை கட்டும் பணிகளை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "கேரள மாநிலம் நெல்லிப்பதி என்ற இடத்தில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே சட்டத்திற்கு எதிராக தடுப்பணை கட்டும் நடவடிக்கைகளில் அம்மாநில அரசு ஈடுபட்டிருக்கிறது. கோவை மாநகரத்திற்கு கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் வகையிலான கேரள அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.
கேரளத்தின் அட்டப்பாடி பள்ளத்தாக்கில் உருவாகும் சிறுவாணி ஆறு தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆற்றுடன் இணைகிறது. கோவை மாநகரத்தின் மிக முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி ஆறு திகழ்கிறது. இந்த முக்கியமான ஆற்றில் அட்டப்பாடி கூலிக்கடவு மற்றும் சித்தூர் சாலையில் நெல்லிப்பதி என்ற இடத்தில் 5 அடி உயரத்தில் தடுப்பணையை கேரள அரசு கட்டி வருகிறது. அதற்கான பணிகள் 90 விழுக்காடு முடிவடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இவை தவிர அதே பகுதியில் மேலும் இரு இடங்களில் தடுப்பணைகளை கட்டுவதற்கான ஏற்பாடுகளை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த தடுப்பணைகள் கட்டப்பட்டால் கோவை மாநகருக்கு கோடையில் குடிநீர் கிடைக்காது. மாநிலம் விட்டு மாநிலம் பாயும் ஆறுகளை ஆக்கிரமிப்பு செய்வதில் கர்நாடகம், ஆந்திரம், கேரளம் என அனைத்து மாநிலங்களுமே தமிழகத்திற்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாநிலமும் அங்கு உருவாகி தமிழகத்தில் பாயும் ஆறுகள் மீது தடுப்பணை கட்டுவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றன.
அவ்வாறு கட்டப்படும் தடுப்பணைகள் அனைத்தும் ஆற்று நீர் பகிர்வு தொடர்பான ஒப்பந்தங்களுக்கு எதிரானவை தான் என்றாலும் கூட அதை எந்த மாநிலமும் மதிப்பது கிடையாது. கேரளத்தில் உருவாகும் சிறுவாணி ஆறு பவானி ஆற்றில் கலக்கிறது. பவானி காவிரியின் துணை ஆறு என்பதால், பவானி, சிறுவாணி ஆகிய இரு ஆறுகளும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன.
அதனால், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை எவ்வாறு கட்ட முடியாதோ, அதேபோல், தமிழக அரசின் ஒப்புதலும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதியும் இல்லாமல் சிறுவாணி ஆற்றின் குறுக்கே செங்கல்லைக் கூட கேரள அரசு எடுத்து வைக்க முடியாது. கேரளத்தில் உள்ள சிறுவாணி ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் அணை கட்டப்பட்டதன் நோக்கமே கோவைக்கு குடிநீர் வழங்குவது தான்.
ஆனால், அதற்கு மாறாக சிறுவாணி அணைக்கும், தமிழகத்தில் உள்ள பில்லூர் அணைக்கும் இடையே 3 தடுப்பணைகளை கேரள அரசு கட்டுவதன் நோக்கம் அட்டப்பாடி பகுதியில் தண்ணீரைத் தேக்கி உழவு செய்வது தான் எனத் தெரிகிறது. ஆற்றுநீர் பகிர்வு ஒப்பந்தத்திற்கு எதிரான இந்த அத்துமீறலை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. சிறுவாணி ஆற்றில் தடுப்பணை கட்டி வரும் கேரள அரசு இதற்கு முன்பே பவானி ஆற்றில் தேக்குவட்டை, மஞ்சகண்டி ஆகிய இடங்களில் இரு தடுப்பணைகளை கட்டியுள்ளது.
பாடவயல், சீரக்கடவு, சாவடியூர், சாளையூர் ஆகிய நான்கு இடங்களில் தடுப்பணைகள் கட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. புதிய அணைகள் கட்டப்படுவதை கண்டித்து கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி கேரள எல்லையில் மாபெரும் போராட்டத்தை நடத்தி நான் கைதானேன். பவானி ஆற்றின் குறுக்கேயும், சிறுவாணி ஆற்றின் குறுக்கேயும் தடுப்பணைகள் கட்டப்படுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
இல்லாவிட்டால், கோவைக்கு குடிநீர் கிடைப்பதில் மட்டுமின்றி, அத்திக்கடவு மற்றும் அவினாசி திட்டத்தை செயல்படுத்துவதிலும் கடுமையான பின்னடைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை அரசு உணர வேண்டும். எனவே, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனை தொடர்பு கொண்டு சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை உடனடியாக கைவிடும்படி வலியுறுத்த வேண்டும்.
கேரள அரசின் இந்த அத்துமீறல் குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்று சிறுவாணியின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago