மத ரீதியிலான மோதல் இன்றி தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: மத ரீதியிலான மோதல் இன்றி தமிழகம் அமைதிப்பூங்காவாக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், காவல் நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை அடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கூட்டத் தொடரில் நேற்று முதல் காவல் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இதன்படி, நேற்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, ஆருத்ரா நிதி நிறுவன மோசடி, வேங்கைவயல் விவகாரம், பல்வீர் சிங் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து, இன்று (ஏப்.21) காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசி வருகிறார்.

அப்போது பேசிய அவர், சாதிச் சண்டை இன்றி தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது.கடந்த ஆட்சியுடன் ஒப்பிடும்போது இந்த ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் வெகுவாகக் குறைந்துள்ளது. காவல் நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை அடைய நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை உக்கடத்தில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். 3 நாளில் இது போன்ற வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றியது தமிழக அரசு தான். கோவை பாதுகாப்பை கருதி பல்வேறு பகுதிகளில் புதிய காவல்நிலையங்கள் அமைக்கவும், கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் முடிவெடுக்கப்பட்டன. மத ரீதியிலான மோதல் இன்றி தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்ந்து வருகிறது.

ஆரூத்ரா போன்ற நிதி நிறுவனங்கள் மக்களிடம் ஆசையை தூண்டி ஏமாற்றுகின்றன. இத்தகையை நிதி நிறுவனங்களை கண்காணிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். பொதுமக்கள் எச்சரிக்கையுடன் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்." இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE