அதிமுக தலைமை அலுவலகத்தில் வன்முறை சம்பவம் - பேரவையில் இபிஎஸ், ஓபிஎஸ், முதல்வர் விவாதம்

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நேரிட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கிடையே காரசார விவாதம் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று காவல், தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.

பொள்ளாச்சி வி.ஜெயராமன் (அதிமுக): அதிமுக ஆட்சியில் ஸ்காட்லாந்து யார்டு காவல் துறைக்கு நிகராக தமிழக காவல்துறை திகழ்ந்தது. ஆனால், தற்போதைய திமுக ஆட்சியில் காவல் துறையின் ஈரல் கெட்டுவிட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில், காவல் துறையினர் முன்னிலையிலேயே வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியது.

முதல்வர் ஸ்டாலின்: கட்சி அலுவலகத்துக்கு காவல் துறை தகுந்த பாதுகாப்பு அளித்தது.

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: சட்டப்பேரவையின் பிரதான எதிர்க்கட்சி அதிமுக. மொத்தம் 32 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் திட்டமிட்டு சிலர் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டனர். இதுபோன்ற வன்முறைச் சம்பவம் நடைபெறக் கூடும் என்று கருதி, முன்னரே காவல் துறையில் புகார் அளித்திருந்தோம். ஆனால், போதிய பாதுகாப்பு தரப்படவில்லை.

முதல்வர் ஸ்டாலின்: இது உட்கட்சி விவகாரம். கட்சி அலுவலகத்துக்கு வெளியே தகுந்த போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர்: திமுக கட்சி இரண்டாகப் பிரிந்தபோது நாங்கள் உரிய பாதுகாப்பு அளித்தோம்.

முதல்வர்: நாங்கள் கட்சி அலுவலகத்துக்குள்ளே இதுபோன்று அடித்துக் கொள்ளவில்லை.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: சட்டப்பேரவை வேறு திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதிமுக அலுவலகத்தில் நிகழ்ந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. நாங்கள் நிராயுதபாணியாக அதிமுக தலைமை அலுவலகம் சென்றோம். தலைமை அலுவலகத்தை பூட்டுபோட்டு பூட்டிவிட்டு, 300 பேர் நாற்காலி போட்டு வீதியில் அமர்ந்திருந்தனர். ஒரு பெரிய கும்பல் எங்கள் காரைத் தாக்கி வன்முறை வெறியாட்டம் நடத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகிறது. அந்தக் கலவரம் யார் மூலம் நடந்தது என்பதை காவல் துறை விசாரித்து, மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் வன்முறையாளர்கள் யார், அத்துமீறியது யார் என்று மக்களுக்குத் தெரியவரும். இதுகுறித்து தனியாக மேடை போட்டு பேசவும் நான் தயாராக இருக்கிறேன்.

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: ஏற்கெனவே நாங்கள் கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுத்து, உரிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தால் வன்முறைச் சம்பவம் நடந்திருக்காது.

முதல்வர் ஸ்டாலின்: இந்த சம்பவத்தில் காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளது. 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கட்சி அலுவலகத்துக்கு காவல் துறையினர் முறைப்படி பாதுகாப்பு கொடுத்துள்ளனர். காவல் துறையினர் கைகட்டி வேடிக்கை பார்க்கவில்லை. உரிய நடவடிக்கை எடுத்துள்ளனர். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE