பேரவையில் கேள்விகளும் பதில்களும்: 9-ம் வகுப்பில் கருணாநிதி பாடம்; தலைவர்களின் சிலைகளில் ‘க்யூ ஆர் கோடு’

By செய்திப்பிரிவு

600 நலவாழ்வு மையங்கள் விரைவில் திறப்பு: சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, அம்பத்தூர் தொகுதி திமுக உறுப்பினர் ஜோசப் சாமுவேல், தனது தொகுதியில் பொது மருத்துவமனை அமைக்க வேண்டும் என்றும், நகர்ப்புற நலவாழ்வு மையங்களை விடுபட்ட பகுதிகளில் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘‘அம்பத்தூரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் ஆவடியில் 57 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, 13 கி.மீ. தொலைவில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை உள்ளன. கடந்த கூட்டத் தொடரில் 110-வதுவிதியின்கீழ் முதல்வர் அறிவித்தபடி, 21 மாநகராட்சி மற்றும் 63 நகராட்சிகளில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன.

சென்னையில் 200 வார்டுகளில் நகர்ப்புற நலவாழ்வுமையங்கள் அமைக்கும் பணியில், 191 வார்டுகளில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, 160 இடங்களில் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டும் பணி நிறைவடைய உள்ளது. சென்னை தவிர்த்து தமிழகம் முழுவதும் 450 மையங்கள் என மொத்தம் 600-க்கும் மேற்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையங்களை முதல்வர் ஒரே நாளில் திறந்து வைக்க உள்ளார்’’ என்றார்.

9-ம் வகுப்பில் கருணாநிதி பாடம்: விராலிமலை தொகுதி அதிமுக உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் பேசும்போது, ‘‘தமிழக பள்ளிகளில் அதிகம் தேர்ச்சி பெறுவதும், அதிகம் மதிப்பெண்கள் எடுப்பதும் மாணவிகளாக உள்ளனர். எனவே, தற்போது பள்ளிகளில் மாணவிகளின் இடைநிற்றல் எந்த அளவில் உள்ளது?’’ என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஸ், தமிழக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் பெண்களுக்கு உயர்கல்வியின்போது மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சேர்க்கை விகிதம் 29 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுத்தந்த கருணாநிதியின் பிறந்த நூற்றாண்டையொட்டி, தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டை போற்றும் வகையில், இந்த கல்வியாண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்திட்டத்தில் அவரைப் பற்றிய பாடம் வருகிறது’’ என்றார்.

தலைவர்களின் சிலைகளில் ‘க்யூ ஆர் கோடு: அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி பேசும்போது, ‘‘தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யருக்கு தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் சிலை அமைப்பதுடன், அந்த சிலைக்கு அருகில் அவரைப் பற்றிய விவரங்களை கல்வெட்டில் பொறித்து வைக்க வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார்.

அதற்கு பதிலளித்த செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ‘‘தமிழ்த்தாத்தா உவேசா சிலை, சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ளது. நிதிநிலைக்கேற்ப பிற இடங்களில் சிலை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும். தற்போது முதல்வர் தெரிவித்துள்ளபடி, தலைவர்களின் சிலைகளுக்கு அருகில் ‘க்யூ ஆர் கோடு’ வைக்கப்பட்டு, அது செய்தித்துறையின் இணையதளத்தில் இணைக்கப்படும். இதன்மூலம், அந்த ‘க்யூ ஆர் கோடை’பதிவேற்றினால், சிலை யாருடையது, அவரது வரலாறு உள்ளிட்டதகவல்கள் வரும். இப்பணிகள் ஒரு வாரத்தில் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE