சென்னையில் பேட்டரி வாகனத்தில் ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை தொடக்கம்

By செய்திப்பிரிவு

கோடை வெயில் வாட்டும் நிலையில், சென்னையில் மெரினா, தியாகராய நகர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 33பேட்டரி வாகனங்கள் (புஷ்கார்ட் வாகனங்கள்) மூலமாக, ஆவின் ஐஸ்கிரீம் வகைகள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனம் சார்பில், ஐஸ்கிரீம் எடுத்துச் செல்லும் பேட்டரி வாகனம் மூலமாக, ஆவின் ஐஸ்கிரீம் வகைகள் விற்பனை தொடக்க விழாசென்னை எழிலகத்தில் உள்ள அதிநவீன ஆவின் பாலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

தமிழக பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமை வகித்தார். விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புவிருந்தினராக பங்கேற்று, பேட்டரி வாகனங்கள் மூலம் ஆவின் ஐஸ்கிரீம் வகைகளின் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.

பால்வளத் துறை ஆணையர் ந.சுப்பையன், கரூர் வைஸ்யா வங்கியின் சென்னை மண்டல மேலாளர் லட்சுமணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் இந்தபேட்டரி வாகனங்கள் மூலமாக, ஐஸ்கிரீம் வகைகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

100 வகை ஐஸ்கிரீம்கள்: கோடைக்காலத்தை முன்னிட்டு, ஆவின் நிறுவனம் சார்பில் ஐஸ்கிரீம், தயிர், மோர், லஸ்ஸி போன்றவற்றை விற்பனை செய்ய பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் கடற்கரை, வழிபாட்டுத் தளங்கள், சுற்றுலா தளங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் ஆவின் ஐஸ்கிரீம் கிடைப்பதை உறுதி செய்ய 33 பேட்டரி வாகனங்கள் மூலமாக ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்பட உள்ளது.

மெரினா, தியாகராயநகர், பெசன்ட்நகர், திருவான்மியூர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. கரூர் வைஸ்யா வங்கியின் பெரு நிறுவன சமூகப் பொறுப்பு திட்டம் மூலமாக, இந்த பேட்டரி வாகனங்கள் ரூ.40 லட்சம் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

குளிர்சாதனப் பெட்டியுடன் சேர்ந்து ஒரு பேட்டரி வாகனத்தின் விலைஒரு லட்சத்து 21 ஆயிரத்து 658 ஆகும்.இந்த வாகனத்தில் குல்பி, ஐஸ்கிரீம் கப், சாக்கோ பார், சாக்கோ பீஸ்டு,கசாட்டா, கேன்டி, ப்ரீமியம், ஐஸ்கிரீம்உள்ளிட்ட 100 வகையான ஐஸ்கிரீம்களை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பேட்டரி வாகனத்தில் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை ஏற்றி விற்க முடியும். இதன்மூலம், தினசரி ரூ.1,500 வரை லாபம் சம்பாதிக்க முடியும். பேட்டரி வாகனத்தில் ஒருமுறை சார்ஜிங் செய்தால், 30 கி.மீ.வரை பயணிக்க முடியும். குளிர்சாதனப் பெட்டி 8 மணி நேரம் வரைகுளிர்ச்சியுடன் இயங்கும். பெண்கள் மற்றும் புதிய தொழில் முனைவோருக்குக் குறைந்த முதலீட்டில் சுயதொழில் தொடங்க நல்ல வாய்ப்பு இது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE