வேங்கைவயல் விவகாரத்தில் இதுவரையிலான ‘துரித’ நடவடிக்கைகள் - பேரவையில் பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: வேங்கைவயல் பிரச்சினையில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதன்படி, இன்று (ஏப்.20) காவல் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகைமாலி, வேங்கைவயல் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பி பேசினார்.

இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். அப்போது அவர் பேசுகையில், "புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூர் காவல் நிலைய சரகம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 24-12-2022 மற்றும் 25-12-2022 ஆகிய தினங்களில் 4 குழந்தைகள் உள்பட 5 நபர்களுக்கு வாந்தி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 4 பேர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்ற நிலையில், கோபிகாஸ்ரீ என்ற குழந்தை மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்றது. மருத்துவர் பரிசோதனையில் மாசடைந்த குடிநீரை பருகியதால் உடல்நலக் குறைவு என்று தெரிய வந்தது.

அதற்குப் பிறகு, அந்தக் கிராமத்திலுள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை வருவாய்த் துறையினர் ஆய்வு செய்திருக்கிறார்கள். அப்போது அந்தத் தண்ணீர் துர்நாற்றம் வீசியதுடன், தொட்டியில் மனிதக் கழிவு கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்தத் தொட்டியிலிருந்த நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு மூன்று முறை சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

பாதிக்கப்பட்ட கோபிகாஸ்ரீயின் தந்தை கனகராஜ் 26-12-2022 அன்று கொடுத்த புகாரின் அடிப்படையில் வெள்ளனூர் காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள்மீது வன்கொடுமை சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரிக்க கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு “சிறப்பு விசாரணைக் குழு” அமைக்கப்பட்டது. இக்குழுவினர் தடய அறிவியல் குடிநீர் மாதிரிகளை சேகரித்து, சென்னை தடய அறிவியல் சோதனை மையத்திற்கு நீதிமன்றம் வாயிலாக அனுப்பி வைத்தார்கள்.

27-12-2022 அன்று மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அந்தக் கிராமத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது, “கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் தங்களை வழிபட அனுமதிக்கவில்லை என்றும், ஒரு குறிப்பிட்ட தேநீர்க் கடையில் இரட்டைக் குவளை முறை கடைப்பிடிக்கப்படுவதாகவும்” மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறையிட்டிருக்கிறார்கள்.

அதனடிப்படையில் உடனே குளத்தூர் வட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில் அக்கிராமத்தில் தேநீர்க் கடை நடத்தி வரக்கூடிய மூக்கையா மற்றும் அவரது மனைவி மீனாட்சி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மூக்கையா அன்றைய தினமே கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். அன்றைய தினமே ஆதி திராவிடர்கள் அய்யனார் கோவிலில் வழிபட அனுமதிக்கப்பட்டனர். அப்போது சிங்கம்மாள் என்பவர் ஆதி திராவிடர்கள் சாதிப் பெயரைச் சொல்லி அவதூறாகப் பேசியதால், வட்டாட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில், சிங்கம்மாள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

28-12-2022 அன்று இலுப்பூர் கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தை மூலமாக “மேல்நிலை நீர்த் தொட்டியை அசுத்தம் செய்தவர்கள்மீது விரைவில் நடவடிக்கை, இரட்டைக் குவளை முறையை ஒழிப்பது; அடுத்து, அய்யனார் கோயிலில் அனைத்து சமூக மக்களுக்கு சாதி வேறுபாடின்றி வழிபடுவது” ஆகிய முடிவுகள் அந்தக் கூட்டத்தில் முடிவாக எடுக்கப்பட்டது. அந்தக் கிராமத்தில் சட்டம் - ஒழுங்கு நிலையைப் பராமரிக்க சுழற்சி முறையில் தொடர்ந்து காவல் துறையினர் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டனர். மருத்துவத் துறையினரும் மருத்துவ முகாம் நடத்தியிருக்கிறார்கள்.

சமூக நல்லிணக்கத்தை கடைப்பிடிக்கும் வகையில் 29-12-2022 அன்று அனைத்து சமூகத்தினரும் பங்கேற்ற அமைதி ஊர்வலம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றிருக்கிறது. இவ்வழக்கு விசாரணையை துரிதப்படுத்த, இந்த வழக்கு மாநிலக் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு (சிபிசிஐடி) 14-1-2023 அன்று மாற்றப்பட்டது.

இந்நிலையில்தான், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி நெடுவாசல் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த திருமுருகன், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ஓய்வுபெற்ற நீதியரசர் சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து, விசாரணை அறிக்கையை 2 மாதங்களுக்குள் அளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க, அந்தக் கிராமத்தில் தீண்டாமையை ஒழிக்க, அனைத்து தரப்பு மக்களிடையே அமைதியை நிலைநாட்ட, இந்த அரசு மிகத் துரிதமாக நடவடிக்கை எடுத்திருக்கிறது. அந்த வகையில், இப்போது நியமிக்கப்பட்டிருக்கும், ஓய்வு பெற்ற நீதியரசரின் ஒரு நபர் விசாரணை ஆணையத்திற்கு இந்த அரசு அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு ஓர் அரசாணையையும் வெளியிட்டிருக்கிறது என்பதையும் இம்மாமன்றத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்