‘புதுச்சேரி அரசு ஒப்புதலின்றி அதானிக்கு காரைக்கால் துறைமுகம் தாரைவார்ப்பு’ - இந்திய கம்யூனிஸ்ட் ஏப்.28-ல் ஆர்ப்பாட்டம்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: ‘புதுச்சேரி அரசின் ஒப்புதல் இல்லாமல் காரைக்கால் துறைமுகத்தை அதானி குழுமத்துக்கு தாரைவார்ப்பதை எதிர்த்து வரும் இம்மாதம் 28-ல் காரைக்காலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநிலக் குழு கூட்டம் முதலியார்பேட்டை கட்சி அலுவலகத்தில் தேவசகாயம் தலைமையில் இன்று நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளர் நாராயணா, மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், மாநில துணை செயலாளர் சேதுசெல்வம், தேசிய குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, முன்னாள் எம்எல்ஏ நாரா கலைநாதன், பொருளாளர் சுப்பையா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 'புதுச்சேரி மாநிலத்திலுள்ள காரைக்கால் துறைமுகத்தை புதுச்சேரி அரசின் ஒப்புதல் பெறாமல் அதானிக்கு தந்துள்ளனர். அதானி குழுமத்தின் சரியும் பங்குகளை தாங்கிப் பிடிக்கும் மத்திய அரசின் முறைகேட்டின் ஒரு பகுதியாகவே இது அமைந்துள்ளது. நாகையில் அமையவுள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் சுத்திகரிப்பு நிலையத்தை கணக்கில் கொண்டே இந்த ஏற்பாடு நடந்துள்ளது. முறைகேடான வகையில் புதுச்சேரியின் காரைக்கால் துறைமுகத்தை அதானிக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும். இதை வலியுறுத்தி வரும் 28-ம் தேதி காரைக்காலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். புதுச்சேரியில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும்.

பத்திரப்பதிவு அலுவலகங்களில் பெருகி வரும் ஊழலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக பதிவாளர் மற்றும் துணைப் பதிவாளர் பதவியில் நியமிக்கப்படும் அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறை பிற துறைகளுக்கு பணி இடமாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக அனைத்து துணை பதிவாளர்களையும் இடமாற்றம் செய்ய வேண்டும்.

புதுவையின் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் புதிய மதுபான கடைகள் திறப்பதற்கான அனுமதியை கைவிட வேண்டும். வெறும் வணிக நோக்கில் புதிய மதுபான கடைகளை திறக்க அனுமதி தந்துள்ளது தவறானது. தவறான விஷயத்தால் வெளிமாநிலங்களில் இருந்து அரைகுறை ஆடைகளில் பலரும் புதுச்சேரியில் வலம் வருவதுடன், கலாசாரத்தை சீரழிக்கும் செயலை அரசே ஊக்குவிக்கிறது. சாலை விபத்துகளும் அதிகரித்துள்ளது. ரேஷன்கடைகளை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE