சிறுகனூர் வீட்டடி மனை திட்டத்தில் மோசடி: பொருளாதார குற்றப் பிரிவு எஸ்பி பதிலளிக்க உத்தரவு

By கி.மகாராஜன் 


மதுரை: வீட்டடி மனை திட்ட மோசடி வழக்கை பொருளாதார குற்றப் பிரிவு விசாரிக்கக் கோரிய வழக்கில் பொருளாதார குற்றப் பிரிவு எஸ்பி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் அருளானந்தா நகரைச் சேர்ந்த அமீர் சையது உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: 'நான் வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறேன். எனக்கு மதுரையைச் சேர்ந்த நியோமேக்ஸ் கம்பெனி ஏஜெண்டுகள் இருவர் அறிமுகமாகி, கம்பெனியின் வீட்டடி மனை திட்டத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்றனர். திருச்சி சிறுகனூரில் தற்போது பிளாட்கள் விற்பனை செய்வதாகவும், அங்கு ரூ.20 லட்சம் கொடுத்து ஒரு ஏக்கர் நிலம் வாங்கினால் மாதம் ரூ.30 ஆயிரம் வீதம் போனஸ் தருவதாகவும், போனஸ் தேவையில்லை என்றால் நிலத்தை திரும்ப ஒப்படைத்து ரூ.35 லட்சம் பெறலாம் என்றனர்.

இதை நம்பி முன்பணமாக ஜிபே வழியாக ரூ.1001 அனுப்பினேன். பின்னர் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் கம்பெனி குறித்து விசாரித்த போது, அந்த கம்பெனி காட்டுப்பகுதிகளில் நிலங்களை வாங்கிப்போட்டு கவர்ச்சிகரமான திட்டங்களை சொல்லி பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் வசூலிப்பது தெரியவந்தது.

பொதுமக்களிடம் முதலீடு வசூலித்து மாதம் தோறும் போனஸ் வழங்குவதற்கு செபியிடம் அனுமதி பெறவில்லை. இந்த செயல் மத்திய அரசு முறையற்ற முதலீட்டு திட்டங்களை தடை செய்யும் சட்டத்துக்கு எதிரானது. இது குறித்து தஞ்சாவூர் நகர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீஸார் நவனீதகுமார், நவீன், பாலசுப்பிரமணியன், கமலக்கண்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்ற வேண்டும். அதுவரை தஞ்சாவூர் போலீஸார் விசாரிக்க தடை விதிக்க வேண்டும்.' இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.பாஸ்கர்மதுரம் வாதிட்டார். பின்னர் நீதிபதி, மனு தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி ஜூன் 19-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE