ஃபீனிக்ஸ் மால் மேல்தளத்தில் வணிக வளாக கட்டுமானத்தை எதிர்த்த வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சென்னை வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலின் மேல்தளத்தில் வணிக வளாக கட்டுமானங்கள் மேற்கொள்வதில் தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், வேளச்சேரியைச் சேர்ந்த தி கிரஸ்ட் குடியிருப்போர் நல சங்கத்தினர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘சென்னையைச் சேர்ந்த மார்கெட் சிட்டி ரிசோர்சஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனத்திற்கு சொந்தமான 7 லட்சத்து 20 ஆயிரத்து 15 சதுர அடி நிலத்தில், ஃபீனிக்ஸ் மால் வணிக வளாகம், கிரஸ்ட் மற்றும் கிரஸ்ட் டவர் ஆகிய குடியிருப்புகள் ஆகியவற்றை கட்டப்பட்டுள்ளது.

வணிக வளாகம் மற்றும் குடியிருப்பு வளாகங்களுக்கு செல்வதற்கு தனித்தனி வழி இருந்தாலும், ஃபீனிக்ஸ் மாலுக்கு செல்லக்கூடிய வழியை தற்போது மூடிவிட்டு, குடியிருப்பிற்கான வழியே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஃபீனிக்ஸ் மாலின் செட் பேக் ஏரியாவிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், விதிகளை மீறி மேடை அமைத்து அங்கு தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதுதவிர ஃபீனிக்ஸ் மாலின் மேல்தளத்தில் குடியிருப்புகளை கட்டுவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், வணிக வளாக கட்டுமானங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.

வார நாட்களில் 20 ஆயிரம் பேருக்கு மேலும், வார இறுதி நாட்களில் அதைவிட அதிகமானவர்களும் வந்துசெல்லும் நிலையில், மேலும் கூடுதலாக வணிக வளாகத்தை கட்டுவதால், அசம்பாவித சம்பவங்கள் நேர்ந்தால் பெருத்த சேதம் ஏற்படும். எனவே ஃபீனிக்ஸ் மாலின் மேல்தளத்தில் நடைபெறும் வர்த்தக கட்டுமான பணிகளுக்கு தடைவிதிக்க வேண்டும். விதிமீறல்களை ஆய்வு செய்ய சிஎம்டிஏ, தீயணைப்பு துறை, காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஃபீனிக்ஸ் மாலின் மேல்தளத்தில் வர்த்தக கட்டுமானங்கள் மேற்கொள்வதில் தற்போதைய நிலையே தொடர வேண்டுமென உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE