ஓபிஎஸ் Vs இபிஎஸ் Vs ஸ்டாலின் - அதிமுக அலுவலக மோதல் சம்பவம் குறித்து பேரவையில் காரசார விவாதம்

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த மோதல் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று காரசார விவாதம் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதன்படி, இன்று (ஏப்.20) காலை கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கின. இதனைத் தொடர்ந்து, காவல் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

அப்போது, கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "பிரதான எதிர்க்கட்சி அதிமுக, அதன் தலைமை அலுவலகத்தை சிலர் திட்டமிட்டு தாக்க முயற்சித்தனர். தகுந்த பாதுகாப்பு வழங்கக் கோரி காவல் துறையில் புகார் அளித்தோம். ஆனால் காவல் துறை வழங்கவில்லை" என்று தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், "யார் அத்து மீறியது என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல் துறை பொறுப்பு. யார் வெறியாட்டம் நடத்தினார்கள் என்பதை தனி மேடை போட்டு கூட பேசத் தயாராக இருக்கிறேன்" என்றார்.

இதில் பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், "அதிமுக அலுவலகத்தில் நடந்த பிரச்சினை உட்கட்சி விவகாரம். வெளியே நடந்த சம்பவத்துக்கு நாங்கள் பாதுகாப்பு கொடுத்தோம். உள்ளே நடந்த சம்பவத்துக்கு நாங்கள் பொறுப்பல்ல. இவ்விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உரிய விசாரணை நடக்கிறது. நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இவ்வழக்கில் 16 பேர் கைது செய்யப்பட்டனர்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE