தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஏப். 20-ம் தேதி (இன்று) தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏப். 21-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், ஏப். 22, 23-ம் தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் ஏப். 20-ம் தேதி சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும்.

13 நகரங்களில் வெயில் சதம்

கரூர் பரமத்தியில் 106 டிகிரி, ஈரோட்டில் 105 டிகிரி, வேலூரில் 104 டிகிரி, மதுரை, நாமக்கல், திருச்சி, சேலத்தில் தலா 103 டிகிரி, சென்னை மீனம்பாக்கம், திருப்பத்தூரில் தலா 102 டிகிரி, கோவையில் 101 டிகிரி, தருமபுரி, திருத்தணி, தஞ்சாவூரில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE