கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு சலுகை - அரசியல் சட்டத்தை திருத்த வலியுறுத்தி முதல்வர் தீர்மானம்

By செய்திப்பிரிவு

சென்னை: கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதிதிராவிடர்களுக்கும், பட்டியலின மக்களுக்கான உரிமைகள், சலுகைகளை வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் அரசினர் தனி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

பேரவையில் நேற்று இது தொடர்பாக அரசினர் தனி தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் பேசியதாவது: ஆதிதிராவிடர்களாக இருந்து மதம் மாறிய பிறகும் தீண்டாமை உள்ளிட்ட சாதிய வன்கொடுமைகளுக்கு அவர்கள் ஆளாவது தொடர்கிறது. அரசியல் சட்டப்படி, இந்து, சீக்கியர், புத்த மதம் தவிர்த்த பிற மதங்களை சேர்ந்த யாரும் பட்டியலின வகுப்பை சேர்ந்தவராக கருதப்பட மாட்டார்கள். வரலாற்று ரீதியாக அவர்கள் ஆதிதிராவிடர் வகுப்பினராக இருக்கும்போது, அவர்களுக்கு பட்டியலின வகுப்புக்கான உரிமைகளை வழங்குவதே சரி. அதன் மூலமாகவே அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை கிடைக்கும். மதம் மாறிவிட்டார்கள் என்பதற்காக, சமூகரீதியாக அவர்களுக்கு தரப்பட்டு வந்த உரிமைகளை தர மறுப்பது சரியல்ல.

முதல்வராக கருணாநிதி இருந்த போதெல்லாம், இக்கோரிக்கையை நிறைவேற்றுமாறு பிரதமருக்கு கடிதம் எழுதி, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தினார். மத்திய அரசிடம் இதுபற்றி வலியுறுத்தப்படும் என்று பேரவையில் கடந்த 2011 ஜன.6-ம் தேதி ஆளுநர் உரையில் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது வெளியிட்ட திமுக தேர்தல் அறிக்கையிலும் இதை வலியுறுத்தினோம்.

தமிழகத்தை பொருத்தவரை, பட்டியலின மக்களுக்கு இணையாக கிறிஸ்தவ ஆதிதிராவிடர்களும் சலுகைகள் பெறும் வகையில் அரசாணைகள் வெளியிடப்பட்டு உரிய பயன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் இடஒதுக்கீட்டையும் வழங்குவதே சரியாக, முறையாக இருக்கும்.

அரசியலமைப்பு (பட்டியலின சாதிகள்) திருத்த ஆணையின்படி, இந்து மதத்தில் இருந்து வேறுபட்ட மதத்தினர் எவரும் அட்டவணை சாதிகளின் உறுப்பினராக ஆக முடியாது. ஆனால், சீக்கிய, புத்த மதத்தை பின்பற்றுவோரை பட்டியல் சாதியினராக சேர்க்கும் வகையில் முறையே 1956 மற்றும்1990-ல் திருத்தம் செய்யப்பட்டது. இதேபோன்ற திருத்தத்தைதான் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களும் எதிர்பார்க்கின்றனர்.

‘ஆதிதிராவிடர்கள் மதம் மாறும்போது, தானாக அந்த வகுப்பில் இருந்து வெளியேறி விடுவதால், மதம் மாறிய பிறகு அவர்களது ஆதிதிராவிடர் வகுப்பு சாதி சான்றிதழ் செல்லாது. அவ்வாறு வழங்கப்பட்டால் அது போலி சான்றிதழ்’ என்று தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணைத் தலைவர் கடந்த ஆண்டு கூறியிருந்தார். அப்போது, பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் மத்திய அரசு ஆணையம் அமைத்துள்ளது. இந்த ஆணையம் நாடு முழுவதும் பயணித்து அனைத்து மாநிலங்களின் கருத்தையும் பெற்ற பிறகே இறுதி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இதை வலியுறுத்தி, ‘இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட ரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை, கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி, அவர்களும் அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களை பெற, அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு மத்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது’ என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.

இதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, மமக, கொமதேக, தவாக உறுப்பினர்கள் தீர்மானத்தை வரவேற்று பேசினர்.

பாஜக சார்பில் வானதி சீனிவாசன் பேசியபோது, தீர்மானம் குறித்து கேள்வி எழுப்பினார். இதை அவைக் குறிப்பில் இருந்து பேரவைத் தலைவர் அப்பாவு நீக்கியதால், பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘‘அனைத்து தரப்பினரும் கலந்து பேசி, சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து பலகட்ட ஆய்வுக்கு பிறகு தீர்மானத்தை முறையாக கொண்டு வந்துள்ளோம். அதனால்தான், அதை உறுதிப்படுத்தும் வகையில் பாஜகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர்’’ என்றார். பின்னர், குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.

ட்விட்டரில் முதல்வர் கருத்து

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘மதம் மாறினாலும் சாதி மாறுவது இல்லை. சாதிய இழிவுகள் ஒழிவது இல்லை. அரசியலமைப்பு திருத்தம் வேண்டி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினோம். சாதியின் பெயரால் மறுக்கப்பட்ட உரிமைகளை, சாதியின் பெயரால் கொடுப்பதேசரி’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE