காணாமல்போய் மீட்கப்பட்ட மரகத லிங்கத்தை திருக்கோளிலி நாதர் கோயிலில் ஒப்படைக்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: சட்டப்பேரவையில் சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இவ்விவாதத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:

பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன்: தமிழகத்தில் மிகவும் சிறப்பான துறை இந்து சமய அறநிலையத் துறை. நமது பாரம்பரியம், பழமையைச் சொல்லும் துறை. தஞ்சாவூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மத்திய தமிழகத்தை சுற்றுலா, கோயில்களை இணைந்து ஆன்மிக வழித்தடமாக அறிவித்து, புதிய திட்டங்களை செயல்படுத்தி, முதலீடுகளை ஈர்த்தால் அப்பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க முடியும்.

இந்தியாவில் பத்ரிநாத், பூரி, துவாரகா, ராமேசுவரம் ஆகிய 4 சுற்றுலாத் தலங்களை தரிசிக்க வேண்டுமென்று பக்தர்கள் விரும்புவார்கள். அவ்வாறு ராமேசுவரம் வந்தால் அக்னி தீர்த்தத்தில் குளிப்பது சிறப்பு. ஆனால் அதில், அந் நகரத்தின் கழிவுநீர் கலக்கிறது.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு: இந்த அரசு பொறுப்பேற்றதும், ராமேசுவரம் கோயிலில் 12 ஆண்டுகளாக ஓடாமல் இருந்த தங்கத்தேர் பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அக்னி தீர்த்த பிரச்சினை தொடர்பாக வரைவுத் திட்டத்தை உருவாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்த திட்டத்தில் அக்னித் தீர்த்தம் மற்றும் புண்ணியத் தீர்த்தங்களாக கருதப்படும் 22 குளங்களின் தீர்த்தங்களை சிறந்த முறையில் கட்டுமானம் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

வானதி சீனிவாசன்: தஞ்சை,மதுரை, ராமேசுவரம் கோயில்களை இணைக்க தனியாக ஹெலிகாப்டர் வசதியை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் ஆன்மிக சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து நவீன சேவைகளை ஏற்படுத்த வேண்டும். சில நாட்களுக்கு முன்பு சீர்காழி கோயிலில் தேவாரத்தின் செப்பேடுகள் கிடைத்தன. பாரம்பரியமிக்க ஐம்பொன் சிலைகள், செப்பேடுகளை மாவட்டம்தோறும் கண்காட்சியாக வைக்க வேண்டும்.

முதல்வரின் மூதாதையர்: மேலும், நமது முதல்வரின் தாத்தா பணிபுரிந்த திருக்கோளிலி நாதர் கோயிலில் பல நூறு கோடிமதிப்புள்ள மரகதலிங்கம் காணாமல் போனது. அது மீட்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மரகதலிங்கம் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மரகலிங்கத்துக்கு முறைப்படி பூஜை செய்ய வேண்டும் என்பது பக்தர்களின் விருப்பம். முதல்வரின் குடும்ப மூதாதையர்கள் பணி செய்த அந்த கோயில் மரகதலிங்கத்தை, பக்தர்களின் தரிசனத்துக்காவும், பூஜைக்காகவும் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு: இந்த ஆட்சி பொறுப்பேற்ற பின்பு,சிலை தடுப்பு பிரிவின் அதிவேக பணியால் மீட்கப்பட்டது இந்த மரகதலிங்கம். போதிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால் வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. விரைவில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட கோயிலிடம் மரகதலிங்கம் ஒப்படைக்கப்பட்டு, தினமும் பூஜை செய்வதற்கு இந்த ஆட்சி தயாராக இருக்கிறது.

வானதி சீனிவாசன்: அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தை பாஜக வரவேற்கிறது. ஆகம கோயில்கள் இல்லாத அத்தனை கோயில்களிலும் குறைந்தது 10 ஆண்டுகளாவது அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும். கோவையில் கோனியம்மன் கோயிலுக்குச் சொந்தமான குளத்தை மீட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். கோவை தெற்கு தொகுதியில் நகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு: கோவையில் ரூ.130 கோடியில் சாலைப் பணிகள் நடைபெறுகின்றன. மேலும் ரூ.70 கோடி ஒதுக்கப்படவுள்ளது. கோவையில் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE