விவசாயிகள் இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க வேண்டும் - தமிழக ஆளுநர் ஆ.என்.ரவி

By கி.தனபாலன்


ராமநாதபுரம்: விவசாயிகள் இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கவும், சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கவும் வேண்டும் என ராமநாதபுரம் அருகே இயற்கை வேளாண்மை பண்ணையில் விவசாயிகளுடனான கலந்துரையாடலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்தார். நேற்றுமுன்தினம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தொடர்ந்து நேற்று காலை ஆளுநர் ராமநாதபுரம் அருகே எட்டிவயல் கிராமத்தில் உள்ள பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசனின் இயற்கை வேளாண்மை பண்ணைக்குச் சென்றார். அங்கு பயிரிட்டுள்ள பயிர்கள், நாட்டு மாடுகள், அங்கு உற்பத்தி செய்யும் பொருட்களை பார்வையிட்டார்.

பின்னர் ஆளுநர் விவசாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசும்போது, "உலகில் இந்தியா வளர்ந்த நாடாக மாறிக்கொண்டிருக்கிறது. பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் தங்களது வளர்ச்சியை யுத்தத்திற்கு பயன்படுத்தின. ஆனால் இந்தியா உலகிற்கு உதவும் நாடாக மாறிக் கொண்டிருக்கிறது. உலக நாடுகளில் கரோனாவிற்கு இந்தியா கண்டுபிடித்த மருந்து உயர்வானது. அந்த மருந்தை உலகில் ஏழை நாடுகளுக்கு இலவசமாக வழங்கி தொண்டு செய்தது. அதனால் உலகத்தின் குருவாக இந்தியா உருவாக வெகுகாலம் இல்லை. 2047-ல் உலகில் வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்ற பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

இயற்கை விவசாயத்தில் ஆர்கானிக் விவசாயம், இயற்கை விவசாயம் என இருவகை உண்டு. ஆர்கானிக் விவசாயம் என்பது, உரம், பூச்சிமருந்து இன்றி இயற்கை உரங்களைக் கொண்டு செய்வது. இயற்கை விவசாயம் என்பது அந்தந்த சூழலுக்கு ஏற்ப அங்குள்ள பயிர்களை உருவாக்கி விவசாயம் செய்வது. இந்த விவசாயத்தை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும். குறைந்த தண்ணீரில் உற்பத்தியாகும் சிறுதானிய பயிர்களை விவசாயிகள் அதிகம் உற்பத்தி செய்ய வேண்டும். சிறுதானியங்களில் நல்ல சத்தும், நல்ல வரவேற்பும் உள்ளது" என பேசினார்.

அப்போது வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் எம்.எஸ்.கே.பாக்கியநாதன், "பருவமழை பொய்த்து வறட்சியால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு கடந்த 4 மாதங்களாக பயிர் காப்பீடு இழப்பீடும், நிவாரணமும் தமிழக அரசு வழங்கவில்லை. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மனு அளித்தார்.

அதனைத் தொடர்ந்து ஆளுநர், திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலுக்குச் சென்றார். அங்கு ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் பழனிவேல் பாண்டியன் தலைமையில் அர்ச்சகர்கள் பூரண கும்பமரியாதை அளித்தனர். தொடர்ந்து ஆளுநர் சுவாமி, அம்மன் மற்றும் மரகத நடராஜரை தரிசனம் செய்தார். பின்னர் ராமநாதபுரம் அரசினர் விருந்தினர் மாளிகையில் ஆளுநரை, ராமநாதபுரம் மாவட்ட இளம் தொழில் முனைவோர், மீனவ சங்க பிரதிநிதிகள், தேவர் சமுதாயம், யாதவ சமுதாயம் மற்றும் ஆயிர வைசிய சமுதாய பிரதிநிதிகள் சந்தித்து தங்களது கோரிக்கை மனுவினை அளித்தனர்.

தொடர்ந்து மாலையில் ஆளுநர் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது ஆளுநருக்கு இமானுவேல் சேகரனின் மகள் சுந்தரி பிரபா ராணி, பரமக்குடி தேவேந்திரர் பண்பாட்டுக் கழக தலைவர் பரம்பரை பாலா, செயலாளர் புண்ணியமூர்த்தி, பொருளாளர் முருகேசன் ஆகியோர் பூங்கொத்து, புத்தகம் கொடுத்து வரவேற்றனர். அதைத் தொடர்ந்து ஆளுநரிடம், தேவேந்திரர் பண்பாட்டுக்கழகத்தினர், தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும், இமானுவேல் சேகரன் பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும், அவருக்கு அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்க வேண்டும், பரமக்குடி ஓட்ட பாலம் பகுதியில் இமானுவேல் சேகரனின் சிலை நிறுவ வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள் சங்கம் சார்பில் பணிநிரந்தரம் செய்ய வேண்டும், சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அதனையடுத்து மாலை 4.30 மணிக்கு கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில், தேவர் சிலைக்கு ஆளுநர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் அம்மாள், உறவினர்கள் தங்கவேலு, பழனி ஆகியோர் மலர் கொத்து, புத்தகம் கொடுத்து ஆளுநரை வரவேற்றனர். பசும்பொன் தேவர் நினைவாலயம் சார்பில் ஆளுநருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

பின்னர் தேவரின் பூர்வீக வீட்டில் வாழ்ந்துவரும் காந்தி மீனாள் அம்மாளிடம் ஆளுநர் நலம் விசாரித்தார். தேவரின் பூஜை அறையை பார்வையிட்டு, அங்குள்ள விநாயகர், முருகன் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பிலும், சமுதாய தலைவர்கள் சார்பிலும் தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கூடாது எனவும் ஆளுநரிடம் மனு அளித்தனர்.

நிகழ்ச்சியில் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை, கமுதி வட்டாட்சியர் சேதுராமன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மணிமேகலை, சங்கரபாண்டியன்(கிராம ஊராட்சிகள்) உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்