ஆளுநருக்கு எதிராக தீர்மானம் - ஆதரவு தெரிவித்த மம்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு காலநிர்ணயம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவரை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை இணைத்து, பாஜக அல்லாத மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதில், இதேபோன்ற தீர்மானத்தை அந்தந்த மாநிலசட்டப்பேரவைகளிலும் நிறைவேற்றும்படி ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்த டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தனது கடிதத்தில், ‘மாநில சட்டப்பேரவைகளால் நிறைவேற்றப்படும் சட்ட முன்வடிவுகளை ஆளுநர்கள் ஒப்புதல்அளிப்பதற்காக காலக்கெடுவை நிர்ணயிக்கக் கோரி, மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியதற்காக தமிழக சட்டப்பேரவையை நான் பாராட்டுகிறேன்.

அதே வழியில், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள், தங்களின் அரசியல் சாசனப் பணிகளை மேற்கொள்ள காலக்கெடுவை நிர்ணயம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தி, வரும் கூட்டத் தொடரில் டெல்லி சட்டப்பேரவையில் நான் தீர்மானம் தாக்கல் செய்வேன்" என்று கூறியிருந்தார்.

அவரைப்போலவே, கேரள முதல்வர் பினராயி விஜயனும் தனது ஆதரவை தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிவித்திருந்தார். இவர்கள் வரிசையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மம்தா பானர்ஜிக்கு நன்றி தெரிவித்துள்ள ஸ்டாலின் அது தொடர்பாக தனது வலைதள பக்கங்களில், "மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பாஜக அல்லாத மாநிலங்களில் ஆளுநர்களின் ஜனநாயக விரோத செயல்பாடுகளுக்கு எதிரான முயற்சிகளுக்கு தனது ஆதரவையும் பாராட்டையும் தெரிவித்தார். மேலும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய அனைத்து எதிர்க்கட்சி முதலமைச்சர்களும் சந்திக்க வேண்டும் என்று தெரிவித்தார்" என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE