புதுச்சேரி திமுக எம்.எல்.ஏ.வுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: புதுச்சேரி மாநிலம் நிரவி தொகுதி திமுக எம்எல்ஏவுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கடந்த 2021ம் ஆண்டு புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில், நிரவி - டி.ஆர்.பட்டிணம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட என். நாக தியாகராஜன் 5511 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் மனோகரன், திமுக எம்எல்ஏ, நாக தியாகராஜனின் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவரது மனுவில், வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த காலக்கட்டத்தில் வாட்ஸ் அப் வீடியோ மூலம் வாக்காளர்களின் அனுதாபத்தை பெறும் வகையில் பரப்புரை செய்தது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்று கோரியிருந்தார்.

வாட்ஸ் அப் மூலம் வீடியோ அனுப்பியது பொதுக் கூட்டம் நடத்தி பிரச்சாரம் செய்வதுதாகாது. மொபைலில் பிரச்சாரம் செய்ய மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் தடை ஏதும் விதிக்கப்படவில்லை. எனவே தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி திமுக எம்எல்ஏ மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வாட்ஸ் அப் மூலம் பிரச்சாரம் செய்தது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவுகளை மீறிய செயலா? இல்லையா? என்பது குறித்து விசாரணைக்குப் பிறகே தீர்மானிக்க முடியும் எனக் கூறி, தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி திமுக எம்எல்ஏ தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE