‘உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு’ - அண்ணாமலைக்கு உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: தனது சொத்து விவரங்கள் குறித்து அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வெளியிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும் எனக் கூறி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டபூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் வழக்கறிஞர் ரிச்சர்ட் வில்சன் அனுப்பியுள்ள அந்த நோட்டீஸில், ‘பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14-ம் தேதி கமலாலயத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், திமுகவினர் சொத்துப் பட்டியல் என்ற பெயரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவான தனக்கு ரூ.2,039 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், DMK files என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் அந்த வீடியோவில் மரத்தின் வழியே காட்டப்பட்டும் எனது குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களில் எனது மகன் மற்றும் சிறுமியான எனது மகளின் பெயர்களும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இது குழந்தை உரிமைகள் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரானது.

மேலும், தேர்தல் ஆணையத்தில் நான் சமர்ப்பித்துள்ள சொத்து குறித்த விவரங்களும் அந்த வீடியோவில் காட்டப்படுகிறது. அதில் எனது சொத்து மதிப்பு ரூ.29 கோடி என்று தாக்கல் செய்திருந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு அடுத்தக் காட்சியில், ரெட் ஜெயின்ட் மூவிஸின் சொத்து ரூ.2010 கோடி என்று கூறப்படுகிறது. ஆக,மொத்தம் எனது சொத்து மதிப்பு ரூ.2039 கோடி என்று அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட நான் எனது சொத்து விவரங்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளேன். அது பொதுமக்களின் பார்வைக்கு இருந்து வருகிறது. இந்நிலையில், எனக்கு ரூ.2,039 கோடி சொத்து இருப்பதாக கூறப்படுவது அடிப்படை ஆதாரமற்றது.

எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும், அரசியல் உள்நோக்கத்துடனும் இந்த குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது. கடந்த 16 ஆண்டுகளாக திரைத்துறையில் நல்ல மதிப்பை பெற்றுள்ள ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு இந்த களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, வணிக ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும். எனது கடின உழைப்பால் படிப்படியாக உழைத்து உருவாக்கப்பட்டது இந்த நிறுவனம்.

2011 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியின்போது கூட, ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் முறையாக வருமான வரி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் பெயரில் வெளியிலிருந்து முதலீடுகள் பெறப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளும், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளும் உண்மைக்குப் புறம்பான அடிப்படை ஆதாரமற்றவை. ஒட்டுமொத்தமாக எனக்கு எதிராக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்ற, உண்மைக்குப் புறம்பான, பொதுமக்கள் மத்தியில் எனக்கு இருக்கின்ற நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்.

எனவே, பாஜக தலைவர் அண்ணாமலை, கடந்த ஏப்.14-ம் தேதி நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது DMK files என்ற பெயரில் வீடியோ வெளியிட்டு முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். மேலும், அண்ணாமலையின் பேஸ்ஃபுக் மற்றும் என்மக்கள்.காம் என்ற இணையதளத்தில் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள பதிவுகளை நீக்க வேண்டும். மேலும், அடிப்படை ஆதாரமற்ற உண்மைக்குப் புறம்பாக என்மீது குற்றம் சுமத்தியதற்காக மன்னிப்பு கோர வேண்டும். மன்னிப்புக் கேட்கத் தவறினால், ரூ.50 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்படும். இந்த தொகை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும்.

இந்த நோட்டீஸைப் பெற்றுக்கொண்ட 48 மணி நேரத்தில் உரிய விளக்கம் அளிக்காவிட்டால், அண்ணாமலை மற்றும் அவரது சொத்துகளுக்கு எதிராக உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE