சென்னை பாரிமுனை கட்டிட விபத்து: 3 மணி நேரத்தில் கழிவுகள் முழுமையாக அகற்றம் - கே.என்.நேரு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை பாரிமுனை ஆர்மேனியன் தெருவில் உள்ள கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில், கட்டிட கழிவுகள் 3 மணி நேரத்தில் முழுமையாக அகற்றப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சென்னை பாரிமுனை ஆர்மேனியன் தெருவில் உள்ள மூக்கர் நல்லமுத்து தெருவில் ஒரு பழைய கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்தக் கட்டிடம் இன்று காலை திடீரென மளமளவென சரிந்து விழுந்தது. இதில், இரண்டு பேர் காயமடைந்தனர். மீட்பு பணியில் பல்வேறு துறையினர் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கட்டிட விபத்து ஏற்பட்ட பகுதியினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“கட்டிடத்தின் உரிமையாளர் பரத். சமீபத்தில் தான் கட்டிடத்தை வாங்கி உள்ளார். கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 1100 சதுர அடி. தரைத்தளம் மற்றும் மூன்று தளங்கள் கொண்டது இந்தக் கட்டிடம். இந்தக் கட்டிடம் 60 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. சென்னை மாநகராட்சி, தீயணைப்புத் துறை, காவல் துறை, தேசிய பேரிடர் மீட்பு படைகள் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 30 லாரிகள் மூலம் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டுவருகிறது. இன்னும் 3 மணி நேரத்தில் கழிவுகள் முழுவதுமாக அகற்றப்படும். இடிபாடுகளில் யாரும் சிக்கி இருக்க வாய்ப்பு இல்லை.

சென்னையில் ஒவ்வொரு மழையின்போதும் பழைய கட்டிடங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லாத கட்டிடங்களை கணக்கு எடுத்து, அதை அகற்ற உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்படுகிறது. ஆனால் பலர் அகற்றவது இல்லை. ஒரு சில கட்டிடங்கள் தொடர்பாக வழக்கு உள்ளது. சட்டப்படி நோட்டீஸ் அனுப்பி இடிக்க முயற்சி செய்தால், விலை உயர்ந்த பொருட்கள் உள்ளே உள்ளது என்று கூறுகிறார்கள். இதன் காரணமாக சட்டத்திற்கு உட்பட்டு, நடவடிக்கை எடுக்க முடிய இல்லை. இந்தக் கட்டிடத்தில் மறு சீரமைப்பு பணி தான் நடைபெற்று வருகிறது. இடிந்து விழும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இது தொடர்பாக விளக்கம் கேட்கப்படும். வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE