மெரினா இணைப்புச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறின்றி மீன் கடைகள்: மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: "மெரினா இணைப்புச் சாலை விவகாரத்தில், யாருக்கும் தரம்சங்கடம் ஏற்படுத்த நீதிமன்றம் விரும்பவில்லை. பொதுச் சாலை மாநகராட்சி சொத்தல்ல. அது மக்களின் சொத்து. அதேநேரம் சாலையை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது. இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது" என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை, அப்பகுதி மீனவர்கள் ஆக்கிரமித்து மீன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஐஸ் பெட்டிகளை சாலையோரம் வைத்துவிடுவதாலும், வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்துவதாலும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும்; மாலை 4 மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், லூப் சாலையின் மேற்கு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்யவும், அங்குள்ள உணவகங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது. இதன்படி சென்னை மாநகராட்சி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அதில், "லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள மீனவர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் 75 மீன் கடைகள், 15 குடிசைகள், 21 பெட்டிக்கடைகள் அகற்றப்பட்டுள்ளன.

மீன் சந்தை அமைக்கும் வரை மீனவர்கள் குடியிருப்பில் இருந்து சாலைக்கு இடையில் உள்ள இடத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். போக்குவரத்தை முறைப்படுத்தப்படும்" என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பாலாஜி அமர்வு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி தரப்பில், "சாலையின் மேற்கு பகுதியில் உள்ள நடைபாதையில் தற்காலிகமாக மீன்கடைகள் அமைக்கப்படுகிறது. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஒழுங்குபடுத்தப்படும். கலங்கரை விளக்கத்தின் பின்புறமும், சீனிவாசபுரத்தின் அருகிலும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்த இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது" என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் மீன் கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.மேலும், யாருக்கும் தரம்சங்கடம் ஏற்படுத்த நீதிமன்றம் விரும்பவில்லை. பொதுசாலை மாநகராட்சி சொத்தல்ல. அது மக்களின் சொத்து. அதேநேரம் சாலையை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது. இந்த விவகாரத்தை அரசியலாக்க கூடாது" என்று தெரிவிதுள்ளனர்.

இதனிடையே, சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் மீனவர்கள் தங்களது கடைகளை அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் சூழலில், சட்டப்பேரவையில் இன்று (ஏப்.19) எதிர்க்கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது, நொச்சிக்குப்பம் மீனவர்களின் வாழ்வாதாரம் உறுதிசெய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.

இதன் தொடர்ச்சியாக, நொச்சிக்குப்பம் மீனவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE