கோயில் நில விவகாரம்: புதுச்சேரி பேரவையை முற்றுகையிட்ட மீனவ கிராம மக்களுடன் முதல்வர் ரங்கசாமி பேச்சுவார்த்தை

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: மயானக் கொள்ளை நடக்கும் கோயில் நில விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையை மீனவ கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பேரவையின் வாயிற்கதவுகள் மூடப்பட்டதைதொடர்ந்து முதல்வர் ரங்கசாமி, அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். நிலபத்திரம் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்தார்.

புதுச்சேரி உப்பளம் வம்பாகீரப்பாளையம் சன்னாசித்தோப்பில் அங்காள பரமேஸ்வரி கோயில் உள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள மீனவ கிராம மக்கள் ஆண்டுதோறும் மயானக் கொள்ளை விழாவை பிரம்மாண்டமாக நடத்துவார்கள். இங்கு 100 ஆண்டுக்கும் மேலாக கோயிலை சுற்றியுள்ள திடலில் மயானக் கொள்ளை நடந்து வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் இந்த இடத்தை தனியார் தங்களுக்கு சொந்தமான நிலம் என உரிமை கொண்டாடியுள்ளனர். ஆண்டாண்டாக விழா நடத்தும் இடத்தில் எப்படி உரிமை கொண்டாடுவீர்கள் எனக் கேள்வி எழுப்பினர். அதோடு, இன்று முதல்வரை சட்டப்பேரவையில் சந்தித்து முறையிட உப்பளம் மின்துறை அலுவலகம் அருகே ஒன்று கூடினர். அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.

ஊர்வலத்துக்கு முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் தலைமை வகித்தார். தகவலறிந்த தொகுதி எம்எல்ஏ அனிபால் கென்னடி அங்கு வந்தார். மீனவ கிராம மக்களுடன் பேசினார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் சட்டப்பேரவைக்கு வந்தார். அன்பழகன் தலைமையில் மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகள், பொதுமக்கள் ஊர்வலமாக சட்டப்பேரவை நோக்கி வந்தனர்.அவர்களை சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகம் அருகே போலீஸார் தடுப்புகளை அமைத்து தடுத்தால் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீஸார் தடுப்புகளை மீறி சட்டப்பேரவை நுழைவுவாயிலுக்கு வந்தனர். அங்கு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். பேரவையின் கதவுகள் மூடப்பட்டன. பின்னர், முதல்வர் ரங்கசாமியை சந்திக்க முக்கிய நிர்வாகிகளை அனுமதிப்பதாக சபைக் காவலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் தலைமையில் மீனவ பஞ்சாயத்தார், முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர். அப்போது பேரவைத் தலைவர் செல்வம், தொகுதி எம்எல்ஏ அனிபால் கென்னடி ஆகியோர் முதல்வர் அறையில் இருந்தனர்.

அப்போது அன்பழகன், “வம்பாகீரப்பாளையம் சன்னாசித்தோப்பு மயானக் கொள்ளை விழா நூற்றாண்டுக்கும் மேல் நடந்து வருகிறது. இதுவரை அந்த நிலத்துக்கு யாரும் உரிமை கோரியதில்லை. இந்த மயானக் கொள்ளை நடைபெறும் நிலத்தை 1922-ம் ஆண்டு செய்த பதிவை சுட்டிக்காட்டி, 4 பேர் பத்திரம் பதிந்துள்ளனர். இது தொடர்பாக ஆட்சியரை சந்தித்து புகார் அளித்துள்ளோம். இந்த நிலத்தை மீட்டு, கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து தொடர்ந்து மயானக் கொள்ளை நடைபெற வழிசெய்ய வேண்டும்" என்றார். அதையடுத்து அங்கிருந்த கோயில் தரப்பினரும் பேசினர்.

இறுதியில் முதல்வர் ரங்கசாமி, "நிலம் தனியாருக்கு சொந்தமாக இருந்தால் அதை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. தவறான பத்திரப் பதிவு செய்யப்பட்டிருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். பத்திரப் பதிவு தொடர்பாக விசாரணை செய்யப்படும்" என்றார். அதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE