15 ஆண்டுகளைக் கடந்த அரசுப் பேருந்துகள், பிற வாகனங்களை உடனடியாக பயன்பாட்டிலிருந்து நீக்க வேண்டும்: அன்புமணி

By செய்திப்பிரிவு

சென்னை: 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளும், பிற ஊர்திகளும் சுற்றுச்சூழலுக்கு சரி செய்ய முடியாத அளவுக்கு சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமின்றி, அவை அவற்றில் பயணிப்பவர்களுக்கு மட்டுமின்றி, சாலையில் செல்வோருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. இவற்றைக் கருத்தில் கொண்டு 15 ஆண்டுகளைக் கடந்த அரசுப் பேருந்துகளையும், பிற அரசுத் துறை ஊர்திகளையும் உடனடியாக பயன்பாட்டிலிருந்து நீக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் 1500 அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள் உள்பட 4000-க்கும் மேற்பட்ட அரசு ஊர்திகள் 15 ஆண்டுகளைக் கடந்தும் இயக்கப்பட்டு வருவதாகவும், அவற்றை மேலும் ஒன்றரை ஆண்டுகள் இயக்க அனுமதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் பாதுகாப்பிலும், சுற்றுச்சூழலிலும் அக்கறை இல்லாத இந்தக் கோரிக்கை கண்டிக்கத்தக்கது.

வணிகப் பயன்பாட்டுக்கான ஊர்திகளை 15 ஆண்டுகளிலும், தனிநபர் பயன்பாட்டுக்கான ஊர்திகளை 20 ஆண்டுகளிலும் செயல்பாட்டிலிருந்து நீக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. நடப்பாண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இத்திட்டத்தின் செயலாக்கம் குறித்து விவாதிப்பதற்காக தில்லியில் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடைபெற்ற மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்,‘‘தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகளும், 2500 பிற அரசுத்துறை ஊர்திகளும் 15 ஆண்டுகளைக் கடந்தவை. பேருந்துகளை கழிவு செய்தால் மக்களுக்கான போக்குவரத்துச் சேவை பாதிக்கப்படும் என்பதால், அவற்றை மேலும் ஒன்றரை ஆண்டுகள் இயக்க அனுமதிக்க வேண்டும்’’ எனக் கோரியிருக்கிறார். இது ஏற்கத்தக்கதல்ல.

மக்களுக்கு போக்குவரத்து சேவை வழங்க வேண்டும் என்பதைக் காரணம் காட்டி, சுற்றுச்சூழலை சீரழிக்கும் செயல்களை அனுமதிக்க முடியாது. தமிழ்நாடு அரசு கொள்கையின்படி அரசுப் பேருந்துகள் 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டர் ஓடிய பிறகும், அரசு விரைவுப் பேருந்துகள் 3 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டர் ஓடிய பிறகும் மாற்றப்பட வேண்டும். ஆனால், கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அரசுப் பேருந்துகளின் பயன்பாட்டுக் காலம் 9 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோ மீட்டர் என்றும், அரசு விரைவுப் பேருந்துகளுக்கு 7 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோ மீட்டர் என்றும் நீட்டிக்கப்பட்டது. அரசுப் பேருந்துகளை அதிக அளவாக 7 ஆண்டுகள் இயக்குவதற்கே சூழலியலாளர்கள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இப்போது 15 ஆண்டுகளை கடந்து இயக்குவது எவ்வகையில் நியாயம்?

வாழ்நாள் முடிந்த பேருந்துகளை இயக்கும் தீமைக்கு பொதுமக்களுக்கு சேவை வழங்க வேண்டும் என்பது நியாயமான காரணமாக இருக்க முடியாது. 15 ஆண்டுகளைக் கடந்த வணிகப் பயன்பாடு ஊர்திகளை கழிவு செய்யும் திட்டம் கடந்த பல ஆண்டுகளாகவே ஆய்வில் இருந்து வருகிறது. அதை கருத்தில் கொண்டு மூன்றாண்டுகளுக்கு முன்பிருந்தே அரசு தயாராகியிருக்க வேண்டும். அதையும் கடந்து 2021-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை அரசுப் பேருந்துகளின் வாழ்நாள் 6 ஆண்டுகள் தான். அதன்படி பார்த்தால் இப்போது 15 ஆண்டுகளைக் கடந்த 1500 பேருந்துகளும் 9 ஆண்டுகளுக்கு முன்பே கழிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். கடந்த 2021-ஆம் ஆண்டில் பேருந்துகளின் வாழ்நாள் காலம் நீட்டிக்கப்பட்ட போது கூட, இந்த பேருந்துகள் அவற்றின் வாழ்நாளைக் கடந்து 4 ஆண்டுகளுக்கும் மேலாகியிருந்தன. அப்போதாவது அந்த வாழ்நாள் முடிந்த பேருந்துகள் கழிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யத் தவறியது சுற்றுச்சூழலுக்கும், பயணிகளின் பாதுகாப்புக்கும் இழைக்கப்பட்ட துரோகம் ஆகும். அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவது தான் நியாயமானதாக இருக்குமே தவிர, மக்களுக்கு சேவை வழங்குவதற்காக, தகுதியற்ற பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோருவது நியாயமானதாக இருக்காது. அண்டை மாநிலங்களின் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிப்பது மகிழ்ச்சியளிக்கும் அனுபவமாக இருக்கிறது. ஆனால், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் என்றால், பக்கவாட்டில் வரும் ஊர்தி ஓட்டிகளின் மீது கரும்புகையை அடித்து அவர்களை கருப்பாக்குவது, பயணத்தின் போது ஒரு சக்கரம் மட்டும் கழண்டு ஓடுவது, பாலங்களின் மீது பழுதடைந்து நிற்பது போன்ற மீம் சித்திரங்கள் தான் நினைவுக்கு வருகின்றன.

15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளும், பிற ஊர்திகளும் சுற்றுச்சூழலுக்கு சரி செய்ய முடியாத அளவுக்கு சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமின்றி, அவை அவற்றில் பயணிப்பவர்களுக்கு மட்டுமின்றி, சாலையில் செல்வோருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. இவற்றைக் கருத்தில் கொண்டு 15 ஆண்டுகளைக் கடந்த அரசுப் பேருந்துகளையும், பிற அரசுத் துறை ஊர்திகளையும் உடனடியாக பயன்பாட்டிலிருந்து நீக்க வேண்டும்; அவற்றுக்கு மாற்றாக புதிய ஊர்திகளை அரசு இயக்க வேண்டும்" எனக் கூறியிருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்