“தவறுகளை சுட்டிக் காட்டலாம்; திட்டங்களை முடக்கக் கூடாது” - அதிகாரிகளுக்கு புதுச்சேரி முதல்வர் அறிவுரை

By அ.முன்னடியான்

புதுச்சேரி: திட்டங்களை செயல்படுத்தும்போது, தவறு இருந்தால் சுட்டிக் காட்டலாம். அதற்காக திட்டங்களை முடக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவுரை வழங்கியுள்ளார்.

புதுச்சேரியில் 2015-16-ம் ஆண்டுக்கான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை அறிக்கையின் மீது துறை செயலர்கள் மற்றும் துறை தலைவர்களின் சாட்சியங்களை பதிவு செய்வதற்கான பொது கணக்கு குழுவின் கூட்டம் இன்று சட்டப்பேரவை 4-வது மாடியில் உள்ள கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது.

பொதுக் கணக்குழு தலைவர் கே.எஸ்.பி.ரமேஷ் எம்எல்ஏ தலைமை தாங்கினார். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார். கூட்டத்தை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்து பேசியது: “அரசு நிர்வாகம் முறையாக நடைபெறுகின்றதா என உறுதி செய்வதில் தணிக்கை துறைக்கு முக்கிய பங்கு உள்ளது. அவர்களின் வழிகாட்டலே நேர்மையான அரசு நிர்வாகத்தை நடத்த முடியும்.

அதே வேளையில், அரசின் கொள்கை திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதற்கு அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும். தணிக்கை குழு பல்வேறு குறைகளை கட்டிக் காட்டியுள்ளது. சில திட்டங்களை செயல்படுத்தும் போது ஒருசில குறைகள் ஏற்படும். இந்த குறைகளை சுட்டிக்காட்டிலாம். அதற்காக திட்டங்களை முடக்கக் கூடாது.

துறை ரீதியாக குறைகளை களைய வேண்டும். இந்த கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்தி குறைகளை களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இதில் பொதுக் கணக்குழு தலைவர் உறுப்பினர்களான ஜான்குமார், நாஜிம், பாஸ்கர் (எ) தட்சணாமூர்த்தி, லட்சுமிகாந்தன், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதன்மை கணக்காய்வுத் தலைவர் ஆனந்த் (தணிக்கை-2) மற்றும் தணிக்கைத் துறையின் குழுவினர்கள் முன்னிலையில் தணிக்கை பத்திகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன. இக்கூட்டத்தில் உள்துறை, நிதி உள்ளிட்ட 43 துறைகள் மற்றும் அதன் செயலர்கள், துறை தலைவர்கள் கலந்து கொண்டு விளக்கம் அளித்தனர். இந்தக் கூட்டம் தொடர்ந்து நாளையும் நடக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE