சென்னை: சுயநலவாதிகளின் தூண்டுதலின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டு, மெரினா இணைப்பு சாலையில் போக்குவரத்தை முடக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.
சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை, அப்பகுதி மீனவர்கள் ஆக்கிரமித்து மீன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஐஸ் பெட்டிகளை சாலையோரம் வைத்துவிடுவதாலும், வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்துவதாலும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும்; மாலை 4 மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், லூப் சாலையின் மேற்கு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்யவும், அங்குள்ள உணவகங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது மீனவர்கள் தரப்பில் வழக்கில் தங்களையும் இணைக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, "லூப் சாலை பொது சாலையல்ல. மீனவர்கள் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டது. சாந்தோம் சாலை விரிவாக்கம் செய்யும் வரை மட்டும் தற்காலிகமாக லூப் சாலை போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் என மாநகராட்சி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. மேலும், லூப் சாலையை விரிவாக்கம் செய்யக் கூடாது. நடைபாதைகள் அமைக்கக்கூடாது என்ற தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவையும் மீறி, மாநகராட்சி இந்த சாலையை விரிவுபடுத்தியுள்ளது" என்று மீனவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
» ‘‘நடிகர் விமலுக்கு பொறுப்பு வேண்டும்” - இயக்குநர் அமீர் கருத்து
» குட்கா முறைகேடு வழக்கு | மத்திய அரசின் அனுமதி கடிதம் கிடைக்கவில்லை: சிபிஐ தகவல்
அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், "ஏப்ரல் 12 முதல் லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள மீனவர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் 75 மீன் கடைகள், 15 குடிசைகள், 21 பெட்டிக்கடைகள் அகற்றப்பட்டுள்ளன. இந்த பணிகள் தினசரி அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு, ஆக்கிரமிப்பு இல்லாத சாலையாக இருப்பது உறுதிசெய்யப்படுகிறது.
சாலையின் மேற்கு பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் நடமாடும் உணவகங்கள் போன்ற ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, உணவகங்களுக்கு நோட்டீஸ் கொடுக்கபட்டது. இதில் 20 உணவகங்கள் உரிய உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்தன. அவற்றின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். கடற்கரையை ஒட்டிய மீன்கடைகளுக்கு வருவோரின் வாகனங்களை கலங்கரை விளக்கம் மற்றும் பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே உள்ள இடங்களில் மட்டும் நிறுத்தும்படி காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் அனுமதி அளித்தால், மீன் சந்தை கட்டுமான பணிகள் முடியும் வரை சாலையின் மேற்கு பக்கம் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் கடைகளை அமைத்து, சாலையை ஒழுங்குபடுத்த மாநகராட்சி தயாராக உள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், மீன் சந்தை அமைக்கும் வரை மீனவர்கள் குடியிருப்பில் இருந்து சாலைக்கு இடையில் உள்ள இடத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் எனவும், போக்குவரத்தை முறைப்படுத்துவதாகவும் மாநகராட்சி தரப்பில் கோரப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் கடந்த ஒரு வாரமாக லூப் சாலையில் சில சுயநலவாதிகளின் தூண்டுதலின் பேரில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, சாலையில் போக்குவரத்தை முடக்கியுள்ளனர். இதை சகித்துக் கொள்ள முடியாது. சட்டத்தை மீறும் வகையிலும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தும்படி, மீனவர்கள் தரப்பு வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், மீனவர்கள் சாலையை இரு புறமும் ஆக்கிரமித்துள்ளதால் வாகனங்களை இயக்க முடியவில்லை என தெரிவித்த நீதிபதிகள், சாலையை அனைத்து தரப்பினரும் பயன்படுத்துகின்றனர் எனத் தெரிவித்தனர்.பசுமை தீர்ப்பாய உத்தரவு, சுற்றுச்சூழல் அனுமதி பற்றிதான் குறிப்பிடுகிறது எனத் தெரிவித்த நீதிபதிகள், லூப் சாலை நடைபாதையில் உணவகங்கள் அதிகரித்துள்ளன. நடைபாதையில் உணவு சமைக்கப்படுவதை தடுப்பது மாநகராட்சியின் கடமை இல்லையா? எனக் கேள்வி எழுப்பினர். சாலையை சமையலறையாக பயன்படுத்துகின்றனர். சாலையில் 15 அடி வரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, சாலையின் மேற்கு பகுதியில் உள்ள குடியிருப்பில் இருந்து சாலை வரையுள்ள பகுதியில் மீன் கடைகள் அமைக்க மாநகராட்சி தரப்பில் கோரிய அனுமதி குறித்து மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு (ஏப்.19) தள்ளிவைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago